சேவாக்கின் அதிரடியால் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது.
ஐ.பி.எல். சார்பில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 43வது லீக் போட்டியில் திராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ் சர்ஸ் அணி, சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதியது. பூவா தலையா வென்ற சேவக் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக கல்லீஸ், சிப்லி களம் இறங்கினர். இவர்கள் டெல்லி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறினர். 2 ரன் எடுத்திருந்த சிப்லி, மெக்ராத் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கல்லீசும் பெவிலியன் திரும்பினார். ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய இவர் 25 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கயி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். 42 பந்துகளில் 52 ரன்கள் குவித்த கோஸ்வாமி, மகேஷ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
திராவிட் இம்முறை சோபிக்கவில்லை. இவர் 9 ரன் எடுத்த திருப்தியோடு பெவிலியன் திரும்பினார். பாட்டியா வீசிய கடைசி ஓவரை மிஸ்பா வெளுத்து வாங்கினார். வரிசையாக மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என இந்த ஓவரில் 24 ரன்கள் எடுத்து, அணியின் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர் 4 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 25 பந்தில் 47 ரன்கள் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி 20 ஒவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. வழக்கம்போல் சேவாக்- காம்பீர் களம் இறங்கினர். இவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.
19 பந்துகளில் 47 ரன்கள் குவித்த சேவாக், ஒரு சிக்சர் 9 பெளண்டரிகளை விளாசினார். இவரை தொடர்ந்து நன்றாக விளையாடிய கொண்டிருந்த காம்பிரும் ரன்அவுட்டானார். இவர் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தில்சான், டிவிலியர்சுடன் இணை சேர்ந்து நிதானமாக விளையாட ரன்வேகம் குறையத் துவங்கியது.
டிவிலியர்ஸ் 21 ரன்கள் எடுத்தார். தில்சான் 4, தினேஷ் கார்த்திக் 6 ரன்களுக்கு அவுட்டாயினர். அகில் பந்தில் சிக்சர் அடித்து தவான் அணிக்கு வெற்றி தேடி தந்தார். மகரூப் 13, தவான் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டில்லி டேர்டெவில்ஸ் 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.