இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸீலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.
நியூஸீலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் நியூஸீலாந்து அணியை பேட் செய்யும் படி அழைத்தது.
தொடக்க வீரர்களாக ஹவ்- ரெட்மாண்ட் களம் இறங்கினர். இவர்கள் இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினர்.
ஆன்டர்சனின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ரெட்மாண்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் 7 ரன்னில் வீழ்ந்தார்.
பின்னர் வந்த மார்சல் (24), டெய்லர் (19) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது நியூஸீலாந்து அணி.
இதைத் தொடர்ந்து அதிரடி வீரர் மெக்குல்லம் களம் இறங்கினார். இவர் அபாரமாக விளையாடி 97 பந்தில் 97 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர், 13 பெளண்டரிகள் அடங்கும்.
இவரைத் தொடர்ந்து ப்ளைன் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஜேக்கப் ஓரம் 23 ரன்னிலும், விட்டோரி 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
தற்போது நியூஸீலாந்து அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபிராட் 2 விக்கெட்டும், பனிசர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.