அக்தரின் அசுர வேக பந்து வீச்சில் கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதியது.
பூவா தலையா வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சல்மான் பட்டும், ஆகாஷ் சோப்ராவும் களம் இறங்கினர். இவர்கள் டெல்லி அணியின் அபாரமான பந்து வீச்சை சமாளித்து ரன் எடுக்க திணறினர்.
13 ரன்னில் ஆகாஷ் சோப்ரா ஆட்டம் இழந்தார். கங்கூலி 7 ரன்னிலும் அவுட் ஆனார். மறுமுனையில் சல்மான்பட் அபாரமாக விளையாடி 48 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த டேவிட் ஹஸ்ஸி 31 எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. அக்தரின் அனல் பறக்கும் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் காம்பீர் (10), சேவாக் (0) ஆட்டம் இழந்தனர்.
பின்னர் வந்த டிவில்லியர்ஸ் (7), மனோஜ் திவாரி (9) ஆகியோர் அக்தர் பந்தில் அவுட்டானார்கள். 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த டெல்லி அணியை தில்வான், மிஸ்ரா ஆகியோர் சரிவில் இருந்து மீட்டது.
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தில்சான் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து 31 ரன்னில் மிஷ்ரா பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
கடைசி கட்டத்தில் சுக்லா ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்க்க, டெல்லி அணி 17.5 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
கொல்கத்தா தரப்பில் அக்தர் 4 விக்கெட்டுகளும், சுக்லா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் ஆட்டத்திலேயே கலக்கிய அக்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கொல்கத்தா அணிக்கு இது 5-வது வெற்றியாகும். டெல்லி அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.