''சொந்த அணி வீரரை தாக்கியதன் மூலம் ஹர்பஜன்சிங்கின் முகமூடி கிழிந்து விட்டது'' என்று ஆஸ்ட்ரேலியா அணித் தலைவர் பாண்டிங் குற்றம்சாற்றியுள்ளார்.
ஐ.பி.எல். ஆட்டத்தின் போது ஹர்பஜன்சிங், சிறிசாந்த்தை கன்னத்தில் அறைந்தது குறித்து ஆஸ்ட்ரேலியா அணித் தலைவர் பாண்டிங், அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ஹர்பஜன்சிங் மீண்டும் ஒரு தவறை செய்திருக்கிறார். சொந்த அணி வீரரை தாக்கியதன் மூலம் ஹர்பஜன்சிங்கின் முகமூடி கிழிந்து விட்டது.
அதுவும் அவருடன் சுமார் 20 டெஸ்ட் போட்டிகள் இணைந்து ஆடியவரிடம் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தின் மூலம் மக்கள் ஹர்பஜன்சிங் பற்றி சொந்தமாக ஒரு முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மூன்று மாதங்களுக்கு முன்பு சிட்னியில் நடந்த டெஸ்டின் போது சைமண்ட்சை இனவெறியுடன் திட்டியதாக எழுந்த பிரச்சினையில் ஹர்பஜன்சிங்குக்கு முதல் 3 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. பிறகு அது நீக்கப்பட்டு போட்டி கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதத்துடன் விட்டு விட்டார்கள்.
நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு அதுவல்ல. அப்படி பார்த்தால் நான் கூட ஒரு நாள் போட்டிகளின் போது குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காததற்காக 20 முதல் 30 விழுக்காட்டை போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக கொடுத்திருக்கிறேன் என்று பாண்டிங் கூறியுள்ளார்.