புது டெல்லி: ஐ.பி.எல். போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை அறைந்தது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.
இதற்கு ஹர்பஜன் சிங் திங்கட்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்த வீரர் ஹர்பஜன் சிங். பி.சி.சி.ஐ. ஒழுங்கு முறை விதிகளுக்கு அவர் கட்டுப்பட்டவர் ஆவார், இதனால் பி.சி.சி.ஐ. செயலர் நிரஞ்சன் ஷா, ஹர்பஜனுக்கு தாக்கீது அனுப்பியுள்ளார் என்று ரத்னாகர் ஷெட்டி கூறியுள்ளார்.
நேற்று கிங்ஸ் அணி பஞ்சாபிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி தழுவியது. இதனையடுத்து ஸ்ரீசாந்த், ஹர்பஜனிடம் சென்று "ஹார்ட் லக்" என்று கூறியுள்ளார் இதற்கு கோபமடைந்து ஸ்ரீசாந்தை அறைந்ததாக ஹர்பஜன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் இதற்கிடையே தாங்கள் இருவரும் சமரசம் செய்து கொண்டதாக ஸ்ரீசாந்தும் ஹர்பஜனும் தெரிவித்துள்ளனர்.