மொஹாலி டெஸ்ட் போட்டி இரண்டாம் நாள் ஆட்டத்தின் நாயகன் கங்கூலி என்றால் அணித் தலைமை பொறுப்பில் உள்ள தோனி தனது அதிரடி ஆட்டம் மற்றும் அபாரமான தலைமைப் பொறுப்பு உத்திகள் மூலம் இன்றைய தினத்தை தனது அருமையான தினமாக மாற்றியுள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா சரிவிலிருந்து மீண்டு 5 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் என்ற ரன் எண்ணிக்கையுடன் இன்று காலை சற்றே சந்தேகத்துடன் களமிறங்கிய அதே வேளையில் ஆஸ்ட்ரேலிய அணியோ ஆக்ரோஷமான மனோ நிலையில் களமிறங்கியது.
வந்தவுடன் நிறைய ஷாட்-பிட்ச் பவுன்சர் பந்துகளை வீசி நிலை குலையச் செய்யும் உத்தியுடன் களமிறங்கியது. இந்த உத்தி மூலம் இஷாந்த் ஷர்மாவை வெற்றிகரமாக சாய்த்தார் அயராத பந்து வீச்சாளர் பீட்டர் சிடில்.
தோனி களமிறங்கினார். பெங்களூர் டெஸ்டில் இவர் 51 பந்துகளில் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக எப்படி ஆடக்கூடாதோ அவ்வாறு ஆடி தோல்வியில் முடிந்தார்.
ஹர்பஜன், கும்ளே போன்றவர்கள் கூட ஆஸி. அணிக்கு எதிராக 2- 3 அரை சதங்களை எடுத்துள்ள போது ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அதிரடி வீரர் என்ற பெயரையும் பெற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடாதது குறித்த கேள்விகள் இருந்து வந்தன.
ஆனால் இன்று அவர் ஆடிய ஆட்டம் ஆஸ்ட்ரேலியாவை நிலைகுலையச் செய்தது. கபில்தேவை நினைவூட்டிய அவரது ஆட்டம் ஹூக் ஷாட்டில் மிகப்பெரிய சிக்சர் மூலம் துவங்கியது.
ஷாட் பிட்ச் உத்திக்கு எதிராக புல், ஹூக் என்று அவர் ஆஸி. எதிர்பாராதவிதமாக எதிர் தாக்குதல் தொடுத்தார். அதுவரை ஷாட் பிட்ச் பந்துகளில் சற்றே திணறிய கங்கூலி, தோனி கொடுத்த நம்பிக்கையால் புல் ஷாட் ஆடத் துவங்கினார்.
ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்துகளை தனது அசாத்திய சக்தியால் பவுண்டரிகளுக்கு விரட்டினார். சில சமயங்களில் மெதுவாக தட்டி விட்டு வேகமாக ஓடி ரன்களை எடுத்தார் தோனி.
கடைசியாக மணிக்கு 140 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசிக் கொண்டிருக்கும் பீட்டர் சிடில் பந்தை லாங் ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கி அடித்தது சிடிலுக்கு மறக்க முடியாத அச்சுறுத்தலை கொடுத்திருக்கும்.
கடைசியில் நடுவரின் மடத்தனமான தீர்ப்பிற்கு எல்.பி.டபிள்யூ.ஆனார். அவர் நியாயமாக பெற்றிருக்க வேண்டிய அபார சதம் கைக்கு எட்டவில்லை. ஆனால் அவரும் கங்கூலியும் ஆஸ்ட்ரேலியாவை இன்று ஆதிக்கம் செலுத்தினர். சவாலான இலக்கை ஆஸ்ட்ரேலியாவிற்கு தோனி நிர்ணையித்தார்.
அதன் பிறகு ஜாகீர் கான் அவரது வாழ் நாளின் சிறந்த பந்து வீச்சை வீசினார். பேட்டிங்கிற்கு இன்னமும் சாதகமான ஆட்டக்களத்தில் தோனி தனது களத்தடுப்பு உத்திகள் மூலம் ஆஸ்ட்ரேலியா சுலபமான ரன்களை எடுக்கவிடாமல் நெருக்கினார்.
ரிக்கி பாண்டிங் களமிறங்கியபோது புதிய பந்து இஷாந்த் ஷர்மா இன்னமும் ஓவர் கூட வீச வரவில்லை. தோனி மீண்டும் பாண்டிங் முதல் ரன்னை எடுக்க நீண்ட நேரம் ஆகுமாறு செய்தார். கடைசியில் இஷாந்த் பாண்டிங்கை வீழ்த்தினார்.
அதன் பிறகு முதல் டெஸ்டை ஆடும் அமித் மிஷ்ராவிற்கு பந்து வீச இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியாது என்று யோசித்த தோனி உடனடியாக அவரை பந்து வீச அழைத்து கேடிச்சிற்கு தனது நெருக்கமான ஃபீல்டிங் உத்திகளால் அதிக நெருக்கடிகளை கொடுத்தார். கேடிச் கிளீன் பவுல்டு ஆனார்.
பிறகு ஒரு முனையில் மைக் ஹஸ்ஸி தனது முழுத் திறனையும், பொறுமையையும் கடைபிடித்து அபாரமாக விளையாடி வர கிளார்க்குடன் இணைந்து ஒரு விதமான தன்னம்பிக்கை தரும் ஆட்டம் தொடர்ந்தது.
ஆனால் இறுதியில் மீண்டும் தோனி அமித் மிஷ்ராவை பந்து வீச அழைத்தார். ஆனால் அதுவல்ல விஷயம். அவரை விக்கெட்டை சுற்றி வந்து ரவுண்ட் த விக்கெட்டில் வீசக் கோரினார்.
விக்கெட்டை சுற்றி வந்து வீசுகிறார் என்றால், பேட்டிங் முனையில் இருக்கும் பந்து வீச்சாளர் கால்தடங்களை பயன்படுத்தி லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் செய்து உள்ளே கொண்டு வருவார் என்று கிளார்க் எதிர்பார்த்தார். ஆனால் அமித் மிஷ்ரா அவரது முன் அனுமானத்தை உடைத்தார். ஸ்டம்பிற்கு நேராக வீசி கூக்ளியாக்கினார். பந்து நேராக கிளார்க்கின் பேடை தாக்கியது ஆட்டமிழந்தார்.
தனது புது விதமான களத்தடுப்பு உத்திகள் மூலம் பந்து வீச்சாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி ஆஸ்ட்ரேலைய வீரர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளக்கியுள்ளார் தோனி. இதே முறை நாளையும் தொடருமானால் ஆஸ்ட்ரேலியா கடும் போராட்டத்திற்கு ஆளாக நேரிடும் என்பது மட்டும் உறுதி.