பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு பரிசு தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் 29 பதக்கங்களை குவித்து இந்தியா 18-வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் இன்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி போன்ற கலப்பு அணிகள் போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ரூ.22.5 லட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
2028ல் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்ஸில் இன்னும் அதிக பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு அனைத்து பாரா-தடகள வீரர்களுக்கு அரசு அனைத்து வசதிகளையும் செய்யும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.