விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா ஆகிய விருதுகளின் பரிசுத் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
கேல் ரத்னா விருது பெறுபவர் இனிமேல் ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகை பெறுவார். அதாவது முன்பு ரூ.5 லட்சமாக இருந்தது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் துரோணாச்சாரியா, அர்ஜுனா விருது பெறுபவர்கள் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை அதிகம் பெற்று மொத்தம் ரூ.5 லட்சம் பரிசாக பெறுவார்கள் என்று விளையாட்டுத்துறை மத்திய இணை அமைச்சர் பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் இன்று நாடாளு மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் எழுத்து மூலம் அறிவித்தார்.
இந்த பரிசுத் தொகையைத் தவிர, அர்ஜுனா, துரோணாச்சாரியா விருது வென்றவர்கள், ஒலிம்பிக் பதக்கம் வெல்பவர்கள், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஏ/சி சிறப்புச் சலுகை பாஸ்களை மத்திய ரயில்வே அமைச்சகம் வழங்கவுள்ளது.