Publish Date: Thu, 29 Oct 2015 (11:06 IST)
Updated Date: Thu, 29 Oct 2015 (13:08 IST)
சினிமாவும், கிசுகிசுவும் இரண்டற கலந்த இரட்டையர்கள்.
இணையம் வந்தபிறகு மோடி அரசின் விலவாசியைவிட வேகமாக பரவுகின்றன கிசுகிசுக்கள். வரப்போகும் டிஜிட்டல் இந்தியாவை நினைத்தால் குலைநடுங்குகிறது.
அந்தக்கால கிசுகிசுக்கள் நாகரிகம், லாஜிக் இவற்றுடன் சிறிதளவு உண்மையையும் கொண்டிருந்தன. இப்போது வானமே எல்லை.
அர்னால்டு திருவல்லிக்கேணி ஆயா கடையில் ஆப்பம் தின்றார் என்று கூசாமல் எழுதுகிறார்கள். சமீபத்தில் புழக்கத்தில் வந்த சில கிசுகிசுக்கள், ஒய் திஸ் கொலவெறி என்று கேட்கும் ரகத்திலானவை
கிசுகிசுக்களின் ராணி என்றால் அது நயன்தாரா. ஸ்ரீ ராமஜெயம் மாதிரி அவரைப் பற்றி கிசுகிசு எழுதாவிட்டால் பாதி தமிழர்களுக்கு தூக்கம் வராது.
நயன்தாரா விக்னேஷ் சிவனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார், சென்னையிலுள்ள அபார்ட்மெண்டில் இருவரும் சேர்ந்து வசிக்கிறார்கள் என்று பொறாமை புழுதி கிளப்ப கிசுகிசு பலூனை ஊதினார்கள்.
திருமணத்தை அனைவருக்கும் அறிவித்துவிட்டுதான் செய்வேன். நயன்தாராவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறுவதெல்லாம் பொய் என்று விக்னேஷ் சிவன் பலுnனை உடைத்த பிறகும், ஊதுவதற்கு எதாவது கிடைக்காதா என்று அலைகிறார்கள் கிசுகிசு ப்ரியர்கள்.
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடாது என்பது போல், நயன்தாரா விலகிச் சென்றாலும் கிசுகிசுக்கள் அவரை விடுவதாயில்லை.
கிசுகிசு வியாதி முற்றிப் போன ஒரு நோயாளியால் மட்டுமே இதுபோன்ற கவதந்தியை கிளப்ப முடியும்.
அஜித்துக்கு மாரடைப்பு என்றதும் அது காட்டுத்தீ போய் பரவியது. நல்லவேளையாக, அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று தீ பரவாமல் தடுத்தனர்.
நல்லவேளை அதிதீவிர அஜித் ரசிகர்கள் யாரும் பிரார்த்தனை என்று சொல்லி தீக்குளிக்கவில்லை.
வதந்தியை பரப்பிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது வதந்தி நரம்பை போலீஸார் இந்நேரம் பதம் பார்த்திருப்பார்கள்.
கமல்ஹாசன் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தார் என்று தெரிந்த உடனே வதந்தியாளர்கள் சுறுசுறுப்படைந்தனர்.
விளம்பரத்தில் கிடைத்த 16 கோடியை எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் நலனுக்கு அளித்தார் என்று அவர்களாகவே ஒரு சான்றிதழையும் தயாரித்து, தத்ரூபமாக வதந்தி விளையாட்டை ஆடினர். ஆனானப்பட்ட நடிகர்களே அதில் விழுந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சான்றிதழ் பொய் என்று தெரிந்த பிறகே, கேட்டதெல்லாம் கிசுகிசு, படித்ததெல்லாம் வதந்தி என்பது மக்களுக்கு தெரிய வந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால், 16 கோடி அன்பளிப்பு வதந்தியை நம்பி...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..
கமல் ஒரு அவதாரம் என்று புகழ்ந்த அதே அடியார்கள், சான்றிதழ் பொய் என்றதும், அதானே கமலாவது உதவி செய்வதாவது என்று தூற்றினார்கள்.
வடக்கேயிருந்து வந்ததால் நாமும் அதில் இடறிவிழ வேண்டியதாயிற்று. வதந்தியில் சம்பந்தப்பட்டவர்களே, இது வதந்தியா இல்லை உண்மையா என்று குழம்புகிற அளவுக்கு வதந்தியை உருவாக்குவது எப்படி என்பதற்கு அசினின் திருமண கிசுகிசு ஒரு உதாரணம்.
அசின் ராகுல் சர்மாவை காதலிக்கிறார், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிந்து, அடித்தார்கள் பாருங்கள் ஒரு வதந்தி.
நவம்பர் 26 அசினுக்கு டெல்லி நட்சத்திர விடுதியில் திருமணம். அடுத்தநாள் பண்ணை வீட்டில் வரவேற்பு என்று எல்லாமே கனகச்சிதம். ஆங்கில நாளிதழ்களே இதில் விழுந்துவிட்டன.
அசின் உஷாராகி, அடுத்த வருஷம்தான் எனக்கு கல்யாணம் என்று தயக்கத்தோடு விளக்கிய பின்தான் விஷயம் போர்ஜரி என்பது தெரிந்தது.
உலகின் எந்த மூலையில் உள்ளவர்களையும் கிசுகிசு எழுத்தாளர்களும் வதந்தியாளர்களும் விட்டு வைப்பதில்லை.
எந்திரன் இரண்டாம் பாகத்தில் அர்னால்டு நடிக்கிறார் என்ற வதந்தியையொட்டி, சல்மான் கானின் சுல்தான் படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடிக்கிறார் என்று வதந்தியை மூலதனமாக்கி இன்னொரு வதந்தியை கிளப்பினர்.
இந்த கிசுகிசு பாலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்ட் வந்து தென்னிந்தியாவையும் வலம் வந்தது. அதற்குப் பிறகே சுல்தான் டீம் விழித்துக் கொண்டது.
எங்கள் படத்தில் ஸ்டாலோன் நடிக்கலை, இருக்கிற ஒரே லோன் நாங்க படத்துக்காக பேங்கில் போட்ட லோன்தான் என்று சொன்ன பிறகே, ஸ்டாலோனை மும்பை வீதிகள் பார்க்க காத்திருந்தவர்களின் கனவு கலைந்தது.
வரிசைகட்டிவரும் கிசுகிசுவை வடிகட்டவும், கொசு மாதிரி நசுக்கவும் ஐடியா வைத்திருப்பவர்கள் கோடம்பாக்கத்தை அணுகலாம்.