மும்பை போலீஸ் - மலையாளத்தின் முதல் Gay திரைப்படம்
, வெள்ளி, 6 செப்டம்பர் 2013 (15:58 IST)
மும்பை போலீஸ் இந்த வருடம் மே மாதம் வெளியானது. 2010ல் தொடங்கப்பட்ட படம் இவ்வளவு தாமதத்துக்குப் பிறகும் முழுமையாக வெளியாகி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பிருத்விராஜ். அவர் இந்த ஸ்கிரிப்டின் மீதும், இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸின் மீதும் வைத்த நம்பிக்கை.
கச்சிதமான த்ரில்லர் என்று மும்பை போலீஸை சொல்லலாம். படம் நடப்பது எர்ணாகுளத்தில். அங்கு பணியிலிருக்கும் கமிஷனர் மற்றும் இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்களின் அடாவடி போக்கை வைத்து மீடியாக்கள் வைத்த செல்லப் பெயர்தான் மும்பை போலீஸ். இந்த மூவரும் - ரகுமான், பிருத்விராஜ், ஜெய்சூர்யா - மும்பையில் ட்ரெயினிங் எடுத்தவர்கள்.ஏ.சி.பி. பிருத்விராஜ் அடாவடி பேர்வழி. திருமணத்தில் விருப்பமில்லாதவர். தண்ணி பார்ட்டி. இன்வெஸ்டிகேட்டிங் என்று வந்தால் ஆண், பெண் பால் பேதம் பார்க்காமல் நொறுக்குகிறவர். அதனாலேயே சக அதிகாரிகளுக்கும் பிருத்விராஜ் என்றால் அலர்ஜி.இன்னொரு ஏ.சி.பி.யாக வரும் ஜெய்சூர்யா பிருத்விராஜுக்கு நேரெதிர். கொஞ்சம் லவ்வர் பாய் டைப். அப்பாவின் உயர்மட்ட ஸ்டேட்டஸ்க்காக விருப்பமில்லாமல் ஐபிஎஸ் படித்து ஏ.சி.பி. என்பது கௌரவ மெடலாக குத்திக் கொண்டிருப்பவர். சொந்த வீட்டின் புறக்கணிப்பால் பிருத்விராஜுடன் நெருக்கமாக நட்பை வளர்த்துக் கொண்டவர்.
ரகுமான் இவர்களின் உயர் அதிகாரி. அதேசமயம் பிருத்விராஜின் தங்கையின் கணவரும்கூட. அலட்டாமல் இருவரின் ஆர்ப்பாட்டங்களை ரசிக்கிற, ஜென்டில்மேன்.இந்த மூன்று கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையாசிரியர்கள் பாபி - சஞ்சய் துணையுடன் விளையாடியிருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.