Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் சினிமாவும் விமர்சனக் கலையும்

Advertiesment
தமிழ் சினிமா விமர்சனம்
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:40 IST)
ஒரு கலையின் மீதான வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக அக்கலை மீதான விமர்சனம் திகழ்கிறது. தீர்க்கமான விமர்சனங்களுக்கு உட்படாத எந்தக் கலையும் சவலை குழந்தையாகவே பலவீனப்படும். இந்த பு‌ரிதலின் அடிப்படையில் கலைக்கும், கலை விமர்சனத்துக்குமான உறவை எளிமையாக தடாகத்திலிருக்கும் தாமரை தண்டுடன் ஒப்பிடலாம். தடாகத்தின் நீ‌ரின் அளவே தாமரை தண்டும் இருக்கும். விமர்சனத்தின் தீவிரத்தை ஒட்டியே எந்தக் கலையின் வளர்ச்சியும் கட்டமைக்கப்படுகிறது.

சினிமா விமர்சனத்தை பொறுத்தவரை நாம் இன்னும் முதல் படியையே தாண்டவில்லை. சினிமா தமிழில் அறிமுகமான காலத்தில் அறிவு‌ஜிவிகள் அதனை எதிர்கொண்ட விதமே அதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம்.

தமிழில் சினிமா அறிமுகமான முப்பதுகளில் வர்க்க ‌‌ரீதியாகவும், சாதி ‌ரீதியாகவும் சமூகம் பிளவுபட்டு‌க் கிடந்தது. ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் என்று பிரத்யேகமான கேளிக்கைகள் இருந்தன. சாதாரண குடியானவர்களின் கேளிக்கைகளை மேல்வர்க்கத்தினர் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் கீழ்த்தரமானவையாக ஒதுக்கி வந்தனர். இந்த சூழலில் மேல் கீழ் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் பார்த்து ரசிக்கிற கேளிக்கை சாதனமாக சினிமா அறிமுகமானது. இதனை மேட்டுக் குடியினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

FILE
அன்றைய எழுத்தாளர்களிடமும், பத்தி‌ரிகையாளர்களிடமும் இந்த மனநிலையே பிரதிபலித்தது. அவர்கள் சினிமா குறித்து எழுதுவதை அவமானமாக கருதி அதனை தவிர்த்து வந்தனர். அப்படியே எழுத முன்வந்தவர்களும் எதிர்மறையாக தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். 1935ல் கே.பி.சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான நந்தனார் படத்திற்கு விமர்சனம் எழுதிய எழுத்தாளர் கல்கி, படத்தில் எருமை மாடும், பனை மரமும் நன்றாக நடித்திருந்தன என்று குறிப்பிடுகிறார். அன்றைய எழுத்தாளர்களின் சினிமா மீதான துவேஷத்திற்கு கல்கியின் எழுத்து ஒரு சான்று.

ி.என்.பாலசுப்பிரமணியம், ராஜரத்னம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் சினிமாவில் நுழைந்த பிறகு எழுத்தாளர்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் பெரும் உற்சாகத்துடன் திரைப்பட இசை குறித்து எழுத முற்பட்டனர். காந்திய கருத்துகளை தாங்கி சினிமாக்கள் வர ஆரம்பித்த பின் பத்தி‌ரிகைகள் சினிமாவுக்கென அதிக பக்கங்கள் ஒதுக்கின. மணிக்கொடி எழுத்தாளர்களான வா.ரா., பி.எஸ்.ராமையா போன்றோர் சினிமா குறித்து எழுதத் தொடங்கினர்.

ஆயினும் இந்த விமர்சனங்கள் அனைத்தும், சினிமா ஒரு தனித்த கலை வடிவம், அதற்கென்று தனித்துவமான கலை அம்சம் உண்டு என்பதை உள்வாங்கிக் கொள்ளாமல் எழுதப்பட்டவை. திரைப்படத்தின் கதையை, அதன் உள்ளடக்கத்தை இலக்கிய ‌‌ரீதியாக மட்டும் அணுகி எழுதப்பட்டவை. காட்சி ஊடகமான சினிமாவை பு‌ரிந்து கொள்ளவும், அதன் அதிகபட்ச சாத்தியத்தை நோக்கி நகரவும் இந்த விமர்சனங்கள் துணைபு‌ரியவில்லை.

75 ஆண்டுகள் கழிந்த பிறகும் சினிமா குறித்த தீவிரமான விமர்சனங்கள், கட்டுரைகள் காணக்கிடைப்பது அ‌ரிதாகவே உள்ளது. நிழல், கனவு முதலான சிறு பத்தி‌ரிகைகளில் மட்டும் தீவிரமான கட்டுரைகள், நேர்காணல்கள் வெளியாகின்றன. பெரும் பத்தி‌ரிகைகளில் வெளியாகும் விமர்சனங்கள் மேலோட்டமானவை. அபத்தம் நிறைந்தவை. சினிமா குறித்த பு‌ரிதலின்றியே அதிகமும் இப்பத்தி‌ரிகைகளில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.

ஆரம்ப காலத்தில் ஒரு புரொஜெக்டரை வைத்தே சினிமா காண்பிக்கப்பட்டது. இதனால் ஒரு ‌‌ரீல் முடிந்து அடுத்த ‌ரீலை மாற்றுவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. மேலும், தீப்பிடிக்க சாத்தியமுள்ள பிலிம் என்பதால் புரொஜெக்டர் சூடாகும் நேரங்களில் படம் நிறுத்தப்படும். இதன் காரணமாக ஒரு படத்துக்கு ஐந்து முதல் ஏழு இடைவேளைகள் வரை விடப்பட்டன.

இன்று அந்த நிலை மாறிவிட்டது. தொடர்ச்சியாக படத்தை திரையிடுவதில் உள்ள பழைய சிரமங்கள் களையப்பட்டுவிட்டன. இருந்தும் இடைவேளை என்பது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மேலை நாடுகளில் இடைவேளை என்பது பெரும்பாலும் கிடையாது. முழுப்படமும் இடைவேளை இன்றியே காண்பிக்கப்படுகிறது. மாறாக, இந்தியாவில் நடைமுறை சிக்கல்களால் ஏற்பட்ட ஒரு பழக்கம் ஒரு விதியாகவே இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இடைவேளையை முன் வைத்தே திரைக்கதை உருவாக்கப்படுகிறது.

திரைக்கதை குறித்து புத்தகம் எழுதும் எழுத்தாளர்களும் கதையின் எந்தப் பகுதியில் இடைவேளை வரவேண்டும், இடைவேளைக்குப் பிறகு படம் எப்படி வேகம் பிடிக்க வேண்டும் என இடைவேளையை முன் வைத்தே திரைக்கதையை விளக்க முற்படுகிறார்கள். இந்த அபத்தம் சினிமா விமர்சனத்தில் பிரதிபலிப்பதையும் காணலாம். இடைவேளை வரை படம் சூப்பர், இடைவேளைக்குப் பிறகு சொதப்பல் என இடைவேளை எனும் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை வைத்து நாம் விமர்சனங்களை உருவாக்கி வருகிறோம்.

இந்தியா தவிர்த்த பிற உலக மொழி திரைப்படங்களை இப்படி இடைவேளையை வைத்து விமர்சிக்க இயலாது. ஹாலிவுட்டிலும் கூட இந்த அபத்தத்தை காண்பது அ‌ரிது. இடைவேளையை மனதில் வைத்து திரைக்கதையை அமைக்காததே இதற்கு காரணம். உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் தமிழ்ப் படங்கள் இடைவேளையின்றியே திரையிடப்படுகின்றன. இதனால் படத்தில் இடைவேளை ஏற்படுத்தும் ‘ஜம்ப்’பை பு‌ரிந்து கொள்ள முடியாமல் பார்வையாளர்கள் தடுமாறுவது தொடர்கதையாகி வருகிறது.

இதுபோன்று சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவை சினிமாவின் விதிகளாக மாறுவதை முதலில் கண்டறிந்து களைய வேண்டும். சினிமாவுக்கான விமர்சன மொழி தமிழில் உருவாகாதது இன்னொரு குறை. சினிமாவுக்கான கலைச் சொற்கள் உருவாக்கப்படாததே இதற்கு காரணம். மான்டே‌ஜ், ஃபேட் அவுட், ஃபேட் இன், டிஸ்ஸால்வ் என பிரெஞ்சு, ஆங்கில பதங்களையே இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றிற்கான தமிழ் கலைச் சொற்களை உருவாக்க வேண்டியது சினிமா விமர்சனத்தின் முதல் தேவை.

webdunia
WD
கலாச்சாரம் சார்ந்த பார்வைகளும் சினிமாவை பாதிக்கின்றன. தமிழகம் குடும்ப உறவுகளை பிரதானமாக கருதும் நாடு. பெ‌ரியார் தவிர்த்து குடும்பம் எனும் அமைப்பை தமிழகத்தில் யாரும் கேள்விக்குட்படுத்தியதில்லை. தவிர, அப்படி கேள்விக்குட்படுத்தும் நபரை எந்த கேள்வியும் கேட்காமல் ஒதுக்கிவிடும் மனோபாவம் கொண்ட சமூகம் நம்முடையது. இப்படி கேள்விக்குட்படுத்த முடியாத குடும்பம் எனும் அமைப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது தமிழ் சினிமா.

ஒரு திரைப்படம் என்பது முதலில் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். தமிழர்களில் அனேகமாக அனைவருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. மேலும், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படங்களை மட்டுமே நான் எடுப்பேன் என பெருமை பேசும் இயக்குனர்களும் இங்கு அதிகம்.

ஒரு வீட்டில் குடும்பமாக வசிப்பவர்களும் சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது தவிர்த்து அனேகமாக மற்ற அனைத்து வேலைகளையும் மறைவாக அல்லது தனியாகவே செய்கிறார்கள். பெ‌ரியவர்களுக்கு‌த் தெ‌ரியாமல் சிறுவர்கள் செய்யக் கூடிய விஷயங்கள் இருக்கின்றன. பெ‌ரியவர்களுக்கும் சிறுவர்களுக்கு தெ‌ரியாமல் தனியாக செய்யக் கூடிய வேலைகள் நிறைய உண்டு. (மறைவான, தனியான என்றவுடன் ஒழுக்கக் கேடான செயல்களாகதான் அவை இருக்கும் என்று கருத வேண்டியதில்லை). வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பலவற்றை நாம் வேறு நபர்களிடம் வெளிப்படுத்துவதில்லை. இப்படி குளிப்பது முதல் இரவு உறங்குவது வரை நாம் குடும்பமாக சேர்ந்து செய்யாத எத்தனையோ செயல்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன.

நடைமுறை வாழ்க்கை இப்படியிருக்க வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறும் சினிமா மட்டும் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மிகப் பெ‌ரிய முரண். இப்படி கூறுவதன் பொருள், சினிமா குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்கக் கூடதாது என்பதல்ல. அனைத்துப் படங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்பதே. மேலும், குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருப்பதால் மட்டுமே ஒரு படம் சிறந்த படமாகிவிடாது. இதை பு‌ரிந்து கொள்ளாமல், அனைத்துப் படங்களும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும்படி இருக்க வேண்டும் என வாதிடுவதும், அதற்கு தகுந்தார்போல் திரைக்கதை அமைப்பதும், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் என்பதால் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் என விமர்சனம் எழுதுவதும் சினிமா எனும் கலையை ஒரு குறுகிய வட்டத்தில் முடக்கும் செயலே அன்றி வேறில்லை.

குடும்பம் அளவுக்கு தமிழ் சினிமாவை பிடித்தாட்டும் மற்றொரு விஷயம், யதார்த்தம். நல்ல சினிமா என்பதை யதார்த்தம் எனும் தராசில் வைத்தே எடை போடுகிறார்கள் நம் விமர்சகர்கள். உண்மையில் யதார்த்தம் என்பதே ஒரு கற்பிதம், மாயை. யதார்த்தத்துக்காக கொண்டாடப்பட்ட படம் காதல். இந்தப் படத்தில் வரும் இளம் காதலர்கள் இணைய வேண்டும் என படம் பார்த்த அனைவரும் விரும்பினர்.

ஆனால், அப்படி விரும்பிய ஒருவர் தனது பத்தாவது படிக்கும் மகள் மெக்கானிக் ஒருவனை காதலிப்பதை அனுமதிப்பாரா? இல்லை ஒரு அண்ணன் தனது தங்கை மெக்கானிக்கை இழுத்துக் கொண்டு ஓடுவதை அனுமதிப்பானா? நிச்சயமாக மாட்டார்கள். ஆனால் காதல் படத்தின் காதலர்கள் இணைய வேண்டும் என மனதார விரும்பியவர்கள் இவர்கள். திரையில் விரும்பிய ஒன்றை சொந்த வாழ்க்கையில் வெறுக்க என்ன காரணம்?

webdunia
FILE
இரண்டரை மணிநேர படத்தில் மெக்கானிக்கிற்கும், மாணவிக்கும் உள்ள காதல் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கிறது. பல வருட காதலை இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக பார்க்கும் போது உச்ச நிலைக்கு பார்வையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். காதலர்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரார்த்திக்கிறார்கள். திரையில் அது சாத்தியமாகாமல் போகும்போது கண்ணீர் விடுகிறார்கள்.

நிஜ வாழ்க்கையில் காதல் இப்படி தொகுக்கப்படுவதில்லை. உடல் ‌ரீதியான பிரச்சனைகள், பொருளாதார மற்றும் தொழில் பிரச்சனைகள் உள்பட அன்றாட நெருக்கடிகளுக்கு நடுவில் சிறு பகுதியாக மட்டுமே காதல் வந்து போகிறது. திரைக்காதல் ஏற்படுத்தும் மன எழுச்சி இதனால் நிஜத்தில் ஏற்படுவதில்லை. திரையில் காதலர்கள் இணைய வேண்டும் என விரும்பியவர்கள் நிஜத்தில் அதை வெறுப்பதற்கு இதுவே காரணம். மேலும், மெக்கானிக்கின் காதலை தொகுத்ததைப் போல் அவனது பொருளாதார, தொழில் நெருக்கடிகளை தொகுத்து அதையும் ஒரு படமாக எடுக்க இயலும். ஆக, பன்முகத்தன்மை கொண்ட ஒருவ‌ரின் வாழ்க்கையில் காதல் எனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்து அளிப்பதை எப்படி யதார்தம் என கூற இயலும்?

மேலும், பள்ளிக்கு சீருடை அணிந்து செல்வது, திருமணத்துக்கு பட்டுச் சேலை அணிவது, நேர்முக தேர்வுக்கு டக்-இன் செய்வது, காலையில் டிஃபன், மதியம் என்றால் அ‌ரிசி சோறு சாப்பிடுவது என நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் அனைத்தும் நம் சுய விருப்பத்தில் செய்வதில்லை. ஏற்கனவே யாரோ ஒருவர் அல்லது பலர் உருவாக்கி வைத்த நடைமுறையை பின்பற்றுகிறோம, அவ்வளவுதான். சிஸ்டத்தை பின்பற்றுவதை யதார்த்தம் என்று எப்படி கூறுவது? ஆக, நிஜ வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் செயல்களை உண்மையாகவே விரும்பி இயல்பாக, அதாவது யதார்த்தமாக நூறு சதவீதம் சுயத்தன்மையுடன் செய்கிறோமா என்பதே கேள்விக்குறி. இதில் நிஜ வாழ்க்கையின் ஏதேனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்தளிக்கும் சினிமாவை யதார்த்தம் என்ற பார்வையுடன் அணுகி விமர்சனம் செய்வது தவறாகவே அமையும்.

தமிழ் சினிமாவின் மற்றொரு பலவீனம் துறை சார்ந்த அறிவின்மை. திரைக்கதை, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என பெரும் துறைகளை உள்ளடக்கியது சினிமா. சினிமா விமர்சகர்கள் அனைவரும் இந்தத் துறைகள் குறித்த அடிப்படை அறிதல் கொண்டவர்களா என்றால் இல்லை. இதனால் மட்டையடியாக ஒளிப்பதிவு அபாராம் என்றேபடுமோசம் என்றேஒரே வ‌ரியில் முடித்துக் கொள்கிறார்கள். அத்துறையின் நுட்பங்களுக்குள் சென்று ஆராய்வதில்லை (பத்தி‌ரிகைகள் ஒதுக்கும் அரைப் பக்கத்தில் அபாரம் என்று ஒரு வ‌ரி எழுதுவதே அதிகம் என்பது இன்னொரு நடைமுறை சிக்கல்).

மேலே சொன்ன பலவீனம் நிருபர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக இசையமைப்பாளரை பேட்டி காணச் செல்லும் நிருபர் இசையமைப்பாள‌ரின் இசை பங்களிப்பு குறித்து சிறிதளவாவது அறிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும். பொரும்பாலும் அப்படி இருப்பதில்லை. அதனால், இசை குறித்து கேட்காமல், ‘நீங்கள் இரவில் இசையமைத்துவிட்டு எப்போது தூங்கச் செல்வீர்கள்?,’ ‘ஒரு பாடல் ஹிட்டாகவில்லையென்றால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?’ என இசைக்கு சம்பந்தமில்லாத சவசவ கேள்விகளால் பேட்டியை நிரப்புகிறார்கள். பிரபலங்களின் துறையைவிட அவர்களது அந்தரங்க வாழ்க்கையில் ஆர்வம் காட்டும் வாசகர்களும் இத்தகைய பேட்டி மற்றும் விமர்சனங்களால் திருப்தியடைந்து விடுகிறார்கள்.

இந்த சூழல் மாற்றமடைய பார்வையாளர்கள் தொடங்கி எழுத்தாளர்கள், பத்தி‌ரிகைகள், அரசு நிர்வாகம் உள்பட இயக்குனர்கள், தயா‌ரிப்பாளர்கள் வரை அனைவரும் தத்தமது பொறுப்புணர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டியது அவசியம். முக்கியமாக புகழுரைகள், ஜோடனைகள், பாடம் செய்யப்பட்ட பழைய விதிமுறைகள் தவிர்த்து, சினிமா என்பது தனித்த கலை வெளிப்பாடு என்ற பு‌ரிதலுடன் தீவிரமான விமர்சனங்களை உருவாக்க வேண்டும். நல்ல சினிமா உருவாக இதுவே ச‌ரியான ஒரே வழி.

Share this Story:

Follow Webdunia tamil