Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடகம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

Advertiesment
கடகம்
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (13:10 IST)
மனிதநேயம் உள்ள நீங்கள், மரம், செடி, கொடிகளையும் நேசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், தாயாருக்கு ஆரோக்ய குறைவையும், பணப்பற்றாக்குறையையும் தந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்கவிடாமல் சனிபகவான் அலைக்கழித்தாரே!

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சந்தித்தீர்களே! முக்கியமான இடத்திற்கு புறப்படும் போதெல்லாம் வாகனம் பழுதானதே! சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் அடிக்கடி வீட்டில் தண்ணீர் பிரச்னை, கழிவு நீர் குழாய் அடைப்பு என பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்ததே! இனி அந்த நிலை மாறும். குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். தாயார் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வலி, வேதனையைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாரே! அவரின் ஆரோக்யம் சீராகும்.

நோய் குணமடையும். கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்தார்களே! இனி அவர்களையெல்லாம் இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கிற்காக கோர்ட், கேஸ் என்று அலைந்து ஓய்ந்துப் போனீர்களே! தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும்.

மனதில் தொக்கி நிற்கும் தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் நேராக்குங்கள்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டு பிரிய வேண்டி சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள். உறவினர்கள் விஷயத்தில் நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். 

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் சஷ்டம-பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 5-ம் வீட்டில் சனி செல்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திடீர் உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும்.    
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாருக்கு எலும்புத் தேய்மானம், கணுக்கால் வலி, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாய்வழி சொத்தைப் பெறுதில் தடைகள், உங்களுக்கும் வீண் பழி, வேலைச்சுமை வந்துப் போகும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அடகிலிருந்த நகை மற்றும் வீட்டு பத்திரத்தை மீட்க வழி வகைப் பிறக்கும். 
 
உங்கள் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் செலவினங்கள் அதிகமாகும். மற்றவர்கள் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மனைவிக்கு இரத்த சோகை, முழங்கால் வலி, கழுத்து வலி வந்துப் போகும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 

15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிறமொழிப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். 
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் தன்னம்பிக்கை குறையும். மனதில் ஒருவிதமான அச்சம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் நிலையறியாமல் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். 
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 
 
சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் மற்றவர்களை எடுத்தெறிந்துப் பேச வேண்டாம். கண் எரிச்சல், பல் வலி, காது வலி வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். சனிபகவான் லாப வீட்டை பார்ப்பதால் மதிப்பு, மரியாதைக் கூடும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார்.  
 
வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டங்களை சரி செய்வீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். பழைய சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் வாய்ப்புகளும் வரும். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலைச்சுமையும் குறையும். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடித்து உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும்.     
 
கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவ-மாணவிகளே! படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் நீங்கள் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். சிலர் பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூர் அல்லது ஹஸ்டலில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும். 
 
பரிகாரம்: 
தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது தசமி திதி நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil