Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனி பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் (2017 - 2020)

Advertiesment
சனி பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் (2017 - 2020)
, திங்கள், 11 டிசம்பர் 2017 (16:13 IST)
அனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக முடியும் சக்தி கொண்டவர்களே, நீங்கள் மிகவும் மன உறுதி உடையவர்.  எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும்  ரிஷப இராசி வாசகர்களே..,
கிரகநிலை: இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம்  பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: இந்த பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும்  போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு  நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான  திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். நீங்கள் பிடிவாதங்களைத்  தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
 
குடும்பத்தினர் கூட உங்களின் பெருந்தன்மையை உணராமல், உங்களிடம் வழக்குக்காக வரலாம். உங்கள் பேச்சில் கடமை  உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக்  கொள்வீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும்  வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள்  மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல்  ஆரோக்யம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 
 
உத்யோகஸ்தர்களுக்கு இந்த  பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி  சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும்  புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
 
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம்.  மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக  முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக  இருக்கவும்.
 
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய பிரயத்தனப்படுவீர்கள். உங்கள் முயற்சிகள்  அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க கடுமையாக முயற்சி செய்ய  வேண்டியதிருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து குறையலாம். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக  இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. பொறுப்புகள் கூடும். 
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த  ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். ஆனாலும் கடுமையாக உழைக்க  வேண்டியதிருக்கும்.  புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். 
 
பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் கெடலாம். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில்  நிதானம் தேவை. 
 
மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.  ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம்  தேவை. அமிலம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வரவும்.
 
சிறப்பு பரிகாரம்: மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
 
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். 
 
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வ்வாய், சுக்கிரன், குரு.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் (2017-2020)