Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு‌ப் பெய‌‌‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : சிம்மம்

Advertiesment
குருப் பெயர்ச்சி ராசி பலன் சிம்மம்
, வெள்ளி, 18 மே 2012 (19:10 IST)
FILE
சில நேரங்களில் நீங்கள் சீறிப் பாய்ந்தாலும் அதற்கொரு காரணம் இருக்கும். தொலை நோக்குச் சிந்தனையால் காலத்தின் போக்கை உணர்ந்து அதற்கேற்ப குடும்பத்தினரைத் தயார் செய்வதில் வல்லவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 17.5.2012 முதல் 28.5.2013 வரை பத்தாவது வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறித்துவிடுவாரே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள்.

குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சிலிருந்த தயக்கம், தடுமாற்றங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை விலகும். சேமித்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வரவேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும். கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் என்பதை உணருவீர்கள். உங்களின் சுக வீட்டான 4-ம் வீட்டை குரு பார்ப்பதால் எப்போதும் புலம்பித் தவித்துக் கொண்டிருந்த தாயாரின் மனசு மாறும். அவருக்கிருந்த கை, மூட்டு வலியெல்லாம் நீங்கும். தாய்வழி சொந்தம்பந்தங்களால் ஆதாயமுண்டு.

இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, நல்ல வீடு அமையும். சிலருக்கு வீடு கட்ட லோன் கிடைக்கும். கிரகபிரவேஷம் செய்து புது வீட்டில் குடி புகுவீர்கள். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்மாமன் வகையிலிருந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடிவடையும். கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குரு பகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். இழுபறியாகிக் கொண்டிருந்த சொத்துப் பிரச்சனைகள் சாதகமாக முடியும்.

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் ஒரு வருடம் முழுக்க குரு தொடர்வதால் வகிக்கும் பதவியை தக்க வைக்க போராட வேண்டியது வரும். உங்கள் பெயரையும், புகழையும் சிலர் கெடுக்க முயற்சி செய்வார்கள். யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை அறிந்து கொள்வதில் தடுமாற்றம் வரும். வழக்கின் தீர்ப்பு எப்படியிருக்குமோ என்று நினைத்து நிம்மதி இழப்பீர்கள். தூக்கம் குறையும். பிரச்சனை உங்களுக்கு அவ்வளவாக வராது. ஆனால் பிரச்சனை வந்து விடுமோ, நாலு பேர் நம்மை தப்பா நினைத்து விடுவார்களோ, இவ்வளவு நாள் கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ என்றெல்லாம் குழம்பித் தவிப்பீர்கள். உங்களை தகுதியற்றவர் என தரக்குறைவாக பேசினாலும் அமைதி காப்பது நல்லது.

பிள்ளைகளின் பொறுப்பில்லாத் தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தப்பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் போராடுவீர்கள். அவர்களின் கல்யாணமும் இழுபறியாகி முடியும். வெகுநாட்களாக குலதெய்வ கோவிலை புதுபிக்க திட்டமிட்டீர்களே, இப்போது அதற்கான வேலையை பார்ப்பீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்- பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

17.5.2012 முதல் 29.6.2012 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். நிர்வாகத்திறன் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.

30.6.2012 முதல் 9.10.2012 வரை உங்களின் விரைய ஸ்தானதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடிக்கடி பதட்டப்படுவீர்கள். முன்கோபத்தால் ஆரோக்யம் குறையும். தூக்கம் கெடும். அனாவசியமாக அடுத்தவர்களை சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.

10.10.2012 முதல் 5.02.2013 வரை ரோகிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரமடைவதால் அரைகுறையாக நின்றுபோன வேலைகள் உடனே முடியும். ஓரளவு பணவரவு உண்டு. விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். மன இறுக்கம் குறையும். வேலை கிடைக்கும்.

28.04.2013 முதல் 28.05.2013 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சகோதரங்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு சமமா நாமும் பெரிய முதலீடுகளை போடுவோம் என்று மாட்டிக் கொள்ளாதீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து சரக்குகளை கொள்முதல் செய்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். வேலையாட்கள் சில சமயங்களில் முரண்டு பிடிப்பார்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். கடையை வேறிடத்திற்கு மாற்றியமைப்பீர்கள். கெமிக்கல், கமிசன், கன்சக்ஷன், ரியல் எஸ்டேட், எலக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் முரண்டு பிடித்த பங்குதாரர்கள் இனி வளைந்து கொடுத்து போவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்கள்! குரு 10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும். என்ன செய்வதென்றே தெரியாமல் சில சமயத்தில் திணருவீர்கள். யூனியன், சங்கம் இவற்றிலெல்லாம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டாம். அலுவலகத்தில் முன்பிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் செய்த நீங்கள் பொறுப்பேற்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். சக ஊழியர் அடிக்கடி விடுப்பில் செல்வதால் அந்த வேலையையும் நீங்கள் சேர்த்து பார்க்க வேண்டியது வரும். அனாவசியமாக விடுப்புகள் வேண்டாமே. அலுவலக விஷயங்களை வெளியில் பேசாதீர்கள். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். இடமாற்றம் வரும். கணினி துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். உடன் பணிபுரிபவர்களை அதிகம் நம்பி செயல்படவேண்டாம்.

கன்னிப்பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிவிடாதீர்கள். நொறுக்குத் தீனியை குறையுங்கள். அப்பாவிடம் வீணாக கோபப்படுவீர்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி தொடரும் வாய்ப்பு உண்டு. இழுபறியாகிக் கொண்டிருந்த கல்யாணம் விரைவில் நடக்கும்.

மாணவர்களே! வீணா அரட்டையடித்துக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்.

கலைஞர்களே! நாளுக்கு நாள் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். புதிய வாய்ப்புகளில் சம்பள கெடுபிடி காட்டாதீர்கள்.

அரசியல்வாதிகளே, ஆதாரமில்லாமல் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமைக்கு கட்டுபடுங்கள். சகாக்களுக்கு மத்தியில் உங்கள் செல்வாக்கைக் காட்ட கைக்காசை போட்டு செலவு செய்ய வேண்டியது வரும்.

விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். வீட்டில் விசேஷம் நடக்கும்.

இந்த குருமாற்றம் வாழ்க்கையில் முன்னேற நெளிவு சுளிவு தேவை என்பதை உணர்த்துவதாகவும், அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:
திருவண்ணாமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரை பௌர்ணமி திதி நாளில் கிரிவலம் சென்று வணங்குங்கள். ஏழைக்கன்னிப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil