மங்களகரமான விஜய வருடம், வைகாசி மாதம் 14 - ம் தேதி செவ்வாய் கிழமை (28.05.2013) கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில், ஏழாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்திலும், உத்தராயணப் புண்ய கால வசந்த ருதுவில் இரவு மணி 9.15க்கு பிரகஸ்பதி எனும் குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார்.
12.06.2014 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார். எந்த ஒரு கிரகமும் நீசம் அடையாத அனைத்து கிரகங்களும் நட்பு பெறும் நடுநிலை வீடான புதன் கிரகத்தின் மிதுனத்தில் குருபகவான் அமர்வதால் அனைத்து ராசியினருக்கும் மத்திப பலன்களே கிடைக்கும். அதாவது நற்பலன்கள் பெறப் போகும் ராசிக்காரர்களுக்கும் அளவாகவே நல்லது நடக்கும். அதேப்போல் கெடு பலன் ஏற்படப் போகும் ராசிக்காரர்களுக்கும் குறைவாகவே பாதிப்புகள் இருக்கும்.