Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடையாளம் தேடும் சொற்க‌ள்

அடையாளம் தேடும் சொற்க‌ள்
, வியாழன், 26 ஜூன் 2008 (12:21 IST)
நூல்: வெளிச்சத்தின் வாசனை (கவிதைக் தொகுதி)
வெளியீடு: காலச்சுவடபதிப்பகம்.
ஆசிரியர் : தேவேந்திபூபதி

தன் அடையாளத்தை தேடிப் போய்க்கொண்டிருப்பதுதான் தனி மனத்தின் அடிப்படை இயக்கமாக இருக்கிறது. இந்தத் தேடல் ஏதோ ஒரு அளவில் எல்லோருக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தேடல் என்பது பலர் நினைப்பது போல் இலக்கியம், ஓவியம், சிற்பம் போன்ற கலைவெளிப்பாடு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. வாழ்வியக்கத்தின் அடி நாதமாக இது எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு வியாபாரி, ஒரு நடிகை, அல்லது நடிகர், ஒரு வங்கி மேலாளர், என்று எல்லோரும் தனக்கான அடையாளத்தை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தன் அடையாளத்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். கொஞ்ச காலம் கழித்துஅந்த அடையாளத்தை விட்டு விட்டு மறுபடி தன் தேடலைத் தொடருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட தனிமனம் எந்த அளவுக்கு இந்த இயக்கத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் செயல்படுகிறது என்பதில்தான் ஒருவொருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.

சில மனங்கள் சொத்து சுகங்களில் தன் அடையாளத்தைத் தேடுகின்றன. சில மறுபால் இனத்தில். சில மனங்கள் கடவுள் என்னும் கருத்தில். சிலர் கலைவெளிப்பாடுகளின் வழியாக, கவிதைவழியாக.

மனம் ஒவ்வொரு வாழ் கணத்திலும் தான் என்று கருதும் சுய அடையாளத்தை நிறுவ எத்தனிக்கிறது. தன் மனத்தில் தான் அறியாமல் பொதிந்திருக்கும் நிழல் பிம்பங்கள் தன் மனப் பின்னணியாக இருந்து ஒவ்வொரு வாழ் கணத்தின் தன்மையை சுவையை, வண்ணத்தை நிர்ணயிக்கின்றன.

பொதுவாக நம் அடையாளங்கள் சார்பு அடையாளங்களாக இருக்கின்றன. பெற்றோருக்கு மகன் அல்லது மகள்; ஆசிரியருக்கு மாணவன், மாணவி; உடன்பிறந்தோருக்கு சகோதரன், சகோதரி; குருவுக்கு சிஷ்யன்; இப்படி சமூகக் கலாச்சார இயக்கங்கள் நமக்கு ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அடையாளங்களை அளித்துக் கொண்டே இருக்கின்றன. குடும்ப உறவுகள், சமூக உறவுகள், வாழ் நிலை சந்தர்ப்பங்கள் தொடர்ந்து நமக்கான அடையாளங்களைத் தோற்றுவித்த வண்ணம் இருக்கின்றன. நமக்கு உகந்ததென நாம் எண்ணும் அடையாளங்களை நாம் உவந்து ஏற்றுக் கொள்கிறோம். அல்லாதவற்றை மறுக்கின்றோம். உண்மையில் இந்த மாதிரி அடையாளங்களை நாம் ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அடிப்படையில் ஒன்றுதான். நாம் ஏற்றுக் கொள்ளும் அடையாளம் முற்றிலும் நம்முடையதாக ஆகிவிடுவதும் இல்லை. நாம் மறுத்து விட்ட அடையாளங்கள் நம்மை விட்டு முற்றிலுமாகப் போய்விடுவதும் இல்லை...

... இந்த அடையாளம் எதுவும் தன் சுய அடையாளம் அல்ல என்ற அறிவுணர்வு உள்ளத்தில் தோன்ற தொடங்கியதும்தான் பிரச்சனை தொடங்குகிறது. இந்த அறிவுணர்வு உள்ளத்தில் ஆழமாக வேர் கொண்டு மனத்துக்கும் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்பு சமூகம் அளிக்கும் அடையாளங்களை ஏற்றுக் கொண்டு மகிழ்வதும் வெறுத்து மறுப்பதும் பொருளற்றுப் போய்விடுகின்றன...

... தேவேந்திர பூபதியின் கவிதைக்கு வருவோம். தன் சுய அடையாளம் நோக்கிய தேடலின் பல பரிமாணங்கள் இவரது கவிதை உலகில் பரவிக் கிடக்கின்றன.

மீண்டும் மறந்து போன உன் பெயர் என்ற கவிதையில்,

'காற்று என்னை மோதிச் சென்றது
உன் பெயரின் உடம்பைச் சொல்லி'

உடம்பின் பெயர் என்பதுதான் வழக்கம். ஆனால் இங்கு பெயரின் உடம்பு என்று சொல்வது கவிதையை புதியதொரு தளத்திற்குள் கொண்டு செல்கிறது.

அடையாளம் தேடுதலைப் பற்றி குறிப்பாக சொல்லும் கவிதை 'வெளிச்சத்தின் வாசனை'. பெயர், இருப்பிடம், நடந்து வந்த பாதை, இவையெல்லாம் அடையாளத்தைக் குறிப்பனவாகக் கொண்டிருந்துவிட்டு, அவைஅடையாளம் எதனையும் உண்டாக்காத காரணத்தால்,

'வெளிச்சத்தின் வாசனையை நுகர்கிறது நாசி
அதன் சப்தங்களைச்
சுவைத்துக் கொண்டு வரும்
என்மீது இரக்கம் கொண்டு
இளண்ஜ்சூட்டில்
பொன்னிறமான தேனீரைத் தருகிறான்'

அடையாளத்தேடல் புலன் மயக்கத்தில் நுழைந்து விடுகிறது. வெளிச்சத்தின் வாசனை, அதன் சப்தங்கள், இளஞ்சூடு, பொன்னிறமான தேனீர் என்று புலன் வெளியில் அலைகிறது தேடல். இத்தனைக்குப் பிறகும் அடையாளம் காண முடியாமல்

'என்னை யாரென்று வினவப்போகும் உங்களுக்குப்
பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில்
நடுங்குகிறது உடம்பு'

இது போல் அடையாளம் என்ற கவிதையும், புகைப்படம் பற்றிய 3 கவிதைகளும் இந்த விஷயத்தைப் பற்றியே பேசுகின்றன.

அடையாளம் குறித்த தேடல் பற்றிப் பல கவிதைகள் இருந்தாலும், பூபதியின் கவிதை உலகம் விஸ்தாரமானது. 'பச்சையாயிருக்கும் சிவப்பு' என்று தலைப்பிட்ட கவிதை:

இருளை இரண்டாய்க் கிழித்து உன்னைப்
போர்த்திச் சென்றேன்
நீ நிறமற்றிருந்த வேளையில்
மற்றொரு நாள்
வெய்யிலைப் போர்த்தும் வரை
கருமையாய் இருந்தாய்'

இருளை இரண்டாகக் கிழிப்பது அழகான படிமம். இரண்டாகக் கிழித்துப் போர்த்தியதால் ஒரு பாதி மட்டும் பயன்படுத்தப்பட்டது. என்றாகிறது. மற்றபாதி என்னவாயிற்று என்று கேட்கப்போனால் கவிதை சுவாரஸ்யம் கொள்கிறது. மற்றொரு நாள் வெயிலைப் போர்த்தும்போது அதை இரண்டாகக் கிழிப்பதில்லை ஏன்?

'சூதாட்டம்' என்னும்சிறந்த கவிதை:

'ஆட்டத்தின் போக்கை
மாற்றக் கூடிய ஒரு சீட்டு
தேவையற்றபோது கோமாளியாக்கி
ஏமாற்றவும் செய்கிறது
வார்த்தைகளைப் போலவே
....
சீட்டுக் கட்டுகளின் அடியிலிருந்து
இருள் பெருகுகிறது.
....

கொடுத்த வார்த்தைகளில்
விளையாடுவதுதானே ஆட்டம்
அவரவர் கைகளுக்கு
ஆட்ட விதிகள் வசமாகும்போது
அவரவருக்கான பொழுதுகள் விடிகின்றன'.

சீட்டுக் கட்டுக்கடியிலிருந்து இருள் பெருகுவதும், மாறாக அவற்றிலிருந்தே பொழுதுகள் விடிவதும் எனப் பல மடிப்புகளைத் தனக்குள்ளிருந்து பிரித்துப் பிரித்துக் காட்டிக் கொண்டே போகிறது கவிதை.

பூபதியின் கவிதை உலகத்தில் அலுவலகம் தொடர்பான பிரதேசமும், பாலுணர்வின் நுட்பமான சாயலும், முக்கியமானவை. அதிகாலை உறக்கம் என்ற கவிதையில் 'யார் அழைத்தது/ ஸ்பரிசமா ஒலியா' என்னும் கேள்வி நுண்ணர்வின் மெல்லிய அசைவுகளைக் காட்டிச் செல்கிறது.

பூபதியின் கவிதைகளை மொத்தமாகப் படிக்கும்போது மனத்தில் வெளிப்படுவது அவரது பார்வையின் இயல்பான எளிமை. இது அவருடைய வலிமை. இன்ங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுவதுதான் சரி. பல கவிதைகளில் சொற்கள் கவிதையைத் தொடர்ந்து செல்வது என்னும் பாங்கு கவிதைக்கு வலிமை சேர்க்கிறது. மாறாக சில கவிதைகளில் கவிதை சொற்களைத் தொடர்ந்து போவது என்னும் பலவீனமும் தெரிகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக படித்து முடிக்கும்போது நல்ல கவிதைத் தொகுதி ஒன்றைப் படித்த மன நிறைவு மனத்தில் நிறைந்து விடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil