Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஃப்டில் காதலியை அடித்த கால்பந்து வீரர் - அமெரிக்கப் பெண்ணியவாதிகள் கொதிப்பு

செல்வன்
புதன், 30 ஜூலை 2014 (14:10 IST)
அமெரிக்காவில் பால்டிமோர் ரேவன்ஸ் (Baltimore Ravens - பால்டிமோ காக்கைகள்) எனும் பெயர் கொண்ட புட்பால் அணி பால்டிமோரில் உள்ளது. இது இங்கே ஐபிஎல்லில் ஆடும் சென்னை சூப்பர் கிங்க்ஸைப் போன்ற ஒரு அணி. கிரிக்கட்டை வழிநடத்த பி.சி.சி.ஐ. அமைப்பு இருப்பதுபோல், புட்பாலை வழிநடத்த என்.எப்.எல். (National Football League) எனும் அமைப்பு அமெரிக்காவில் உண்டு.
 
ரேவன்ஸ் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர், ரே ரைஸ் (Ray Rice). இவர் அந்த அணியின் வெற்றிக்குக் காரணமான நட்சத்திர விளையாட்டு வீரர். சமீபத்தில் தன் காதலி ஜெனேய் (Janay Palmer) என்பவருடன் கஸினோ ஒன்றுக்குச் சூதாடச் சென்றார். அங்கே குடித்துவிட்டு லிப்டில் செல்கையில் காதலியிடம் எதையோ சொல்ல, அவர் பதிலுக்கு இவர் முகத்தில் துப்பியதுடன் நில்லாமல் ஒரு அறையும் அறைந்தார்.
 
ஆவேசமடைந்த ரே ரைஸ், காதலி முகத்தில் குத்துவிட்டு, கீழே தள்ளினார். இது அனைத்தும் லிப்டின் செக்யூரிட்டி காமிராவில் பதிவானது. அதன்பின் காவலர்கள் வந்து இருவரையும் விசாரித்தனர். இருவருக்கும் அடிபட்டிருந்தது. அதன்பின் காதலர்கள் சமாதானமாகிப் போக முடிவெடுத்து, போலிஸிடம் தெரிவித்துவிட்டார்கள். யாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பதால் போலிஸும் கேஸை எடுக்கவில்லை. காதலர்கள் இருவரும் அதன்பின் திருமணம் செய்துகொண்டு தம்பதியும் ஆகிவிட்டார்கள்.
 
ஆனால் நட்சத்திர விளையாட்டு வீரருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் அது பரபரப்பான செய்தியானது. ரே ரைஸுக்கு எந்தத் தண்டனையும் இல்லை என்பதை அறிந்த பெண்ணியவாதிகள் கொதிப்படைந்தார்கள். அவரைச் சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது என்பதால் என்.எப்.எல்லை அணுகி அவருக்குத் தண்டனை கொடுக்கக் கோரினார்கள்.
 
என்.எப்.எல்லும் ரே ரைஸை அழைத்து விசாரித்தது. வழக்கு பதிவாகாத கணவன் - மனைவி பிரச்சனை என்பதால் அவரை இரு ஆட்டங்களுக்கு மட்டுமே சஸ்பென்ட் செய்தது. அவரும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகக் கூறினார்
இந்தச் செய்தி நேற்று வெளியானதும் இ.எஸ்.பி.என் உள்ளிட்ட ஊடகங்களில் பூகம்பமே வெடித்தது. "அது எப்படி மனைவியை அடிப்பவருக்கு 2 ஆட்டம் மட்டும் தான் தண்டனையா? அவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டால் போதுமா? பொதுமக்களிடம் பகிரங்கமாக டிவியில் தோன்றி மன்னிப்பு கேட்கவேண்டாமா?" என பல பெண்ணுரிமையாளர்கள் இ.எஸ்.பி.என்னில் ஆவேசமாகப் பேசினார்கள்.
 
"என்னதான் மனைவி முதலில் அடித்திருந்தாலும் இவர் எப்படி திருப்பி அடிக்கலாம்?" என ஒருவர் ஆவேசமாகக் கேட்டார். அதன்பின் என்.எப்.எல். அதிகாரியைத் தொலைக்காட்சியில் அழைத்துப் பேட்டி எடுத்தார்கள்
 
"மனைவியை அடிப்பதுக்கு என்.எப்.எல்லில் 2 ஆட்டம் மட்டுமே சஸ்பெண்ட் என்பது, இம்மாதிரி தவறுகளை ஊக்குவிப்பது போல் ஆகாதா?" என சீரியசாக அவரிடம் கேட்டார்கள்.
 
அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை அடக்கிகொண்டு "2 ஆட்டம் மட்டுமே சஸ்பெண்ட் செய்வதால் இதை ஊக்குவிக்கிறோம் என யாரும் கருத மாட்டார்கள்" எனச் சொல்லிவிட்டு "கணவன் மனைவி பிரச்சனை. அதுவும் என்.எப்.எலுக்கு சம்பந்தம் இன்றி எங்கோ, பொது இடத்தில் நடந்த பிரச்சனை. இதற்கு இதுவே போதுமான தண்டனை" எனச் சொல்லிவிட்டார்.
 
இப்பிரச்சனையால் ரே ரைஸுக்கு செல்வாக்கு குறையும் எனப் பெண்ணியவாதிகள் எதிர்பார்க்க, பதிலுக்கு அவர் பெயர் பொறிக்கப்பட்ட டிசர்ட்டுகள் படுவேகமாக விற்றுத் தீர்கின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் அரங்கில் அவர் பெயரைச் சொன்னபோது கரகோஷத்தில் அரங்கே அதிர்ந்தது. இது பெண்ணியவாதிகளுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால் ரே ரைஸுக்கு எதிராக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லிஃப்டிலிருந்து காதலியை இழுத்துச் செல்லும் ரே ரேஸ், வீடியோவில் பதிவான காட்சி இங்கே:
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

Show comments