Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழக்கே போக மறுக்கும் இரயில்

செல்வன்
செவ்வாய், 4 நவம்பர் 2014 (12:45 IST)
பகை நிலவும் நாடுகளுக்கிடையே நல்லெண்ண நோக்கில் பேருந்து விடுவதும், ரயில் விடுவதும் பிரச்சனையை தீர்ப்பதில்லை என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ஜெருசலம் ரயில் ஆகியுள்ளது.
 
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்குப் பேருந்து விட்டு அதில் அவரே ஏறி, பாகிஸ்தான் சென்றார். "பஸ் டிப்ளமஸி" எனப் பலர் அதை அன்று புகழ்ந்தாலும் அதன் பின்னர் கார்கில் போர் மூண்டு அந்த பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டுவிட்டது.
 
அதே போல் ஜெருசலத்தில் யூதர்கள், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதிகள் இடையே ஜெருசலம் லைட் ரயில் எனும் ரயில் இஸ்ரேலிய அரசால் விடபட்டது. ஹெர்ட்சல் மலை எனும் யூதப் பகுதியில் இருந்து கிளம்பி, கிழக்கு ஜெருசலம் நகரின் பாலஸ்தீனப் பகுதிகள் வழியே செல்லும் இந்த ரயில் தடம், வெறும் 9 மைல் தொலைவும் 23 ஸ்டாப்புகளும் கொண்ட ரயில் ஆகும்.
 
ஒன்பது மைல் தான் எனினும் அது சாதாரண ஊர் அல்லவே. ஜெருசலம் பல நூற்றாண்டுகள் தொடர்ந்த பல போர்களுக்குக் காரணமான நகரம் அல்லவா? ரயில் விடப்பட்டு கொஞ்ச நாள் அமைதி நிலவினாலும் அதன்பின் சமீபத்திய இஸ்ரேலிய- ஹமாஸ் போருக்குப் பின் நிலை மிகவும் பதற்றமாகிவிட்டது.

 
முதலில் பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்த டிக்கட் பூத்துகளைப் பாலஸ்தீனியர்கள் அடித்து நொறுக்கினார்கள். அதன்பின் பாலஸ்தீனப் பகுதிகளில் ரயில் செல்கையில் தாக்குதல் நிகழலாம் எனும் அச்சத்தில் ரயிலில் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்புடன் தான் யூதர்கள் பயணிக்கிறார்கள். பாலஸ்தீனர்கள் ரயிலில் போவதையே சுத்தமாக நிறுத்திவிட்டார்கள். ரயில் போகும் வழியெங்கும் அதன்மேல் கற்கள் வீசப்படுகின்றன
 
கடந்த மாதம் அப்துல் ரகுமான் அல்- ஷாலுதி எனும் பாலஸ்தீன இளைஞன் ரயில் நிலையம் ஒன்றில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மேல் தன் காரை விட்டான். ஒரு யூதச் சிறுமியும் இளைஞரும் இதில் இறந்தார்கள். "இது விபத்து" என அப்துல் ரகுமானின் உறவினர்கள் இப்போது கூறினாலும், சம்பவம் நடந்தவுடன் பயந்து காரை விட்டு இறங்கி ஓடிய அப்துல் ரகுமானை ஒரு இஸ்ரேலியக் காவலர் சுட்டுக் கொன்றுவிட்டார். இது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
 
170 முறை கற்கள் வீசப்பட்டதாகக் கணக்கெடுக்கப்பட்டதால் ரயில் முழுக்க இரும்புக் கவசம் அணிந்து, கவசகுண்டலம் அணிந்த கர்ணனைப் போல் காட்சியளிக்கிறது. முன்பு யூதர்களும் அராபியர்களும் சற்று சினேகிதமாக தான் இரயிலில் சென்று வந்தார்கள். ஆனால் இப்போது ரயிலில் ஏறும் பாலஸ்தீனர்களை யூதர்கள் அச்சத்துடன் பார்க்கிறார்கள், சிலர் அவர்களைத் திட்டவும் செய்கிறார்கள். இது நிலையை மேலும் மோசமாக்குகிறது
 
ஆனால் ரயில் விடப்பட்ட சமயம் இதை வரவேற்ற பாலஸ்தினியர்கள் பலரும் இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார்கள். கிழக்கும் மேற்கும் இணையும் இடம் ஜெருசலம் என்பதால் "கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ரயில்" என அப்போது கூறப்பட்டாலும், வாஜ்பாயின் பேருந்துப் பயணம் போலவே இந்த ரயில் பயணமும் ஆகும் எனத் தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

இந்திய அரசியல் சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி SDPI கட்சியினர் போராட்டம்!

Show comments