யோகமே எல்லாப் பொருட்களின் தோற்றமும் ஒடுக்கமும் ஆகும்.
யோகம் மனித மனத்தின் தற்காலப் புதுப் படைப்பு அன்று. நமது பண்டைய வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்ட சம்பத்து.
வேதமே இப்போதுள்ள நூல்களிலெல்லாம் பழமையானது. ஒரு நோக்கில் வேதம், யாகம் சம்பந்தமான அனுபவக் குறிப்புக்களின் பெரியதொரு தொகுப்பாகும்.
எல்லா மதங்களும் வேதமாகிய வேரிலிருந்து மலர்ந்த மலர்களே. எல்லாத் தத்துவக் கொள்கைகளும், கவிதையும், எல்லா மேதாவிலாசப் படைப்புக்களும், உணர்ந்தோ உணராமலோ வேதத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன.
யோகத்தின் மூலமே கடவுள் உலகத்தைப் படைத்தார். யோகத்தின் மூலமே மீண்டும் அதைத் தம்முள் இழுத்துக்கொள்வார் என நம்புகிறோம். யோகமே எல்லாப் பொருட்களின் தோற்றமும் ஒடுக்கமும் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தன் படைப்பின் பெருமையையும், அதை எவ்வாறு முரண்பாடுடையவைகளைச் சமரசப்படுத்துவதன் மூலம் படைத்தான் என்பதையும் வெளிப்படுத்தியபோது, "இதோ எனது திவ்யமான மாயையைப் பார்" எனக் கூறுகிறான்.
யோகம் என்னும் சொல்லுக்குப் பொதுவாக நாம் குறுகிய பொருளே கொள்கிறோம். அதை உபயோகிக்கும் போதும் பிறர் சொல்லக் கேட்கும் போதும் பதஞ்சலி முனிவரின் ராஜ யோகத்தையே, அதன் ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணம், சமாதி ஆகியவற்றையே மனத்தில் கொண்டிருக்கிறோம். இவை ஒரு யோக முறையின் உட்கூறுகள் மட்டுமே.
கங்கையிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்கள் கங்கை ஆகிவிடாதது போல் இம்முறைகளே யோகம் ஆகிவிடாது.
சுவாசப் பயிற்சியைப் பற்றியோ, ஆசனங்களைப் பற்றியோ நினைக்காமலே யோகம் செய்யலாம். ஒருமுனைப்படுதல் (தாரணை) தேவையில்லாமல், முற்றிலும் விழித்த நிலையில், நடக்கும்போது, கடமையாற்றும்போது, சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பிறருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, வேலை செய்து கொண்டிருக்கும்போது, உறங்கும்போது, கனவு காணும்போது, உணர்வற்ற நிலையில், அரை உணர்வு நிலையில், இரட்டை உணர்வுடைய நிலையில் - எப்பொழுதும், எந்நிலையிலும் யோகம் செய்யலாம். அது ஒரு மருந்துச் சரக்கோ, ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு முறையோ, பயிற்சியோ அன்று; அது நித்தியமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு காரியம்; பிரபஞ்சத்தின் இயல்பிலேயே அமைந்துள்ளது அது.
ஆனாலும், நடைமுறையில் யோகம் என்ற சொல்லை, நித்தியமாய் நடந்து கொண்டிருக்கும் இந்தப் பொது நியதியை அல்லாமல் குறிப்பிட்ட இலட்சியங்களை அடையப் பயன்படுத்தும் விசேஷ முறைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் பயன்படுத்துகிறோம்.
யோகம் அடிப்படையான இந்த உண்மையின் மேல் நிற்கிறது : இவ்வுலகில் நாம் எங்கும் ஒன்றாகவும் அதேசமயம் பிரிந்தும் இருக்கிறோம்; எல்லா உயிரினங்களுடன் ஒன்றாகவும், அதே சமயம் வேறாகவும் இருக்கிறோம்; இயற்கை என்றோ, கடவுளென்றோ, பிரம்மனென்றோ நாம் அழைக்கும் அந்த அனந்தப் பொருளுடன் ஒன்றாகவும் அதே சமயம் பிரிந்தும் இருக்கிறோம்.
ஒரு உடலிலிருக்கும் ஆன்மா பிற உடல்களிலுள்ள ஆன்மாக்களுடனும், விழித்த உணர்வுக்குப் பின்னுள்ள தனது பிற பாகங்களுடன், இயற்கைப் பொருள்களுடனும், வேறெதற்குமின்றி அந்த ஐக்கியத்திற்காகவே அல்லது தனது உடல், உயிர், மனத்தின் ஞானம், சக்தி, ஆனந்தத்தைக் கூட்டுவதற்காக ஆற்றல் மிக்க ஐக்கியம் அடையும் திறனே யோகம் ஆகும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நமது உள் ஜீவனையும், ஜீவனின் புறப்பகுதிகளாகிய மனம், உயிர், உடலையும் ஒழுங்குபடுத்தும் எந்த முறையையும் யோக முறை என்று கூறலாம்.