கேள்வி: மனிதன் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கே ஒரு எதிரியாக ஆகிவிட்டானா?
அம்மா: இயற்கை மனிதனைப் பாதுகாப்பது போல் இயற்கையைப் பாதுகாக்க மனிதனும் கடமைப்பட்டவன். மனிதனிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகளுக்கு ஏற்றாற்போல் மரம், செடி-கொடிகள் செயல்படும் என்று இன்று அறிவியல் கூறுகிறது. செடியைக் கிள்ள அருகில் சென்றால் அது நடுங்கும் என்று அறிவியல் கண்டுபிடித்துள்ளது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பாரதத்தில் வாழ்ந்த ரிஷிகள் இந்த உண்மையை அறிந்து அதன்படி வாழ்ந்தனர்.
சகுந்தலையின் கதை தெரியாதா? கன்வ முனிவருக்குக் காட்டிலிருந்து கிடைத்தவள் சகுந்தலை. ஆசிரமத்திலிருந்து அவள் விடைபெற்ற போது அவள் சீராட்டி வளர்த்த முல்லைச் செடி அவளைப் போகவிடாமல் அவளது காலில் சுற்றுக்கொண்டது, அவள் வளர்த்த மிருகங்கள் கண்ணீர் சொரிந்தன. செடி-கொடிகள், மிருகங்கள் மீது நாம் அன்பு செலுத்தினால் அவையும் நம்மீது அன்பு செலுத்தும் என்பதையே இது காட்டுகிறது. ஆனால் இன்று சுயநலம் மிகுந்த மனிதன் அன்பு என்றால் என்ன என்பத¨யே அறியாத நிலையில் இருக்கிறான். சாதாரண மனிதன் ஒரு மின்சார விளக்கு என்றால், ஆத்ம சாதகன் டிரான்ஸ்ஃபார்மர் ஆவான். பலவற்றை நினைத்து அலைபாயும் மனதை ஓரிடத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் சாதகனின் மனம் அமைதியடைகிறது. தான் கற்ற பாடலை மறந்திருக்கும் போது, பாட்டின் முதல் வரியைக் கேட்டதும் அடுத்த வரிகள் நினைவுக்கு வருவதுபோல், தன்னுள் மறைந்திருக்கும் ஆற்றலைச் சாதகன், சாதனையின் மூலம் உணர்வுபெறச் செய்கிறான். வெறுப்பற்ற அவனது மூச்சுக் காற்றுக் கூட இயற்கைக்கு நன்மை பயப்பதாகும். தண்ணீரை வடிகட்டிச் சுத்தம் செய்வது போல், தபஸ்வியின் மூச்சுக்காற்று இயற்கையைத் தூய்மைப்படுத்தும் வடிகட்டியாக விளங்குகிறது. ஆயுர்வேதத்தில் என்ணெயை வடிகட்ட அஞ்சனக்கல்லை உபயோகிப்பதுண்டு. அதுபோல் இயற்கையின் அஞ்சனக்கல்லாக தபஸ்வி விளங்குகிறான். இயற்கையை நோக்கும்போது, இயற்கை நமக்காக எவ்வளவு தியாகம் செய்கிறது என்பதனையும், இயற்கையின் எந்தப் பொருளும் தனக்காக எதையும் சேர்த்து வைப்பதில்லை என்பதையும் காணலாம். அவை அனைத்தும் மனித நன்மைக்காகவே உள்ளன. இவ்விதம் சுயநலமின்றி, எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் மனித சேவை செய்யும் இயற்கைக்குத் துரோகம் செய்பவனின் இதயம் எவ்வளவு குரூரமாக இருக்க வேண்டும்! இயற்கையின் தியாகத்தில் கோடியில் ஒரு அம்சத்தையாவது நாம் இயற்கையின் மீது காட்டுகிறோமா? இயற்கையின் ஒவ்வொரு காட்சியையும் கவனியுங்கள். அவற்றிலிருந்து நாம் கற்பதற்கு எத்தனை எத்தனை பாடங்கள் உள்ளன! அவற்றிலிருந்து பாடங்களைப் புரிந்துகொண்டால் போதும், வாழ்வு ஆனந்தமயமாகும். ஒரு நதியைப் பாருங்கள், இமயத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கிப் பெருகி வந்து, சகலரையும் தழுவித் தாலாட்டியபடி கடலில் சென்று சங்கமமாகிறது. அதுபோல் நமது ஜீவாத்மா, பரமாத்மாவிடம் சென்று இணைய வேண்டும். நதியில் யார் வேண்டுமானாலும் குளிக்கலாம், நீரைக் குடிக்கலாம். தன்னிடம் வருபவர் பெண்ணா, ஆணா என்று நதி பார்ப்பதில்லை. ஜாதி, மத, மொழி பிரச்சனை அதற்கில்லை. குஷ்டரோகி, ஆரோக்கியமுள்ளவன், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் இல்லை. தன்னை நாடிவரும் அனைவரையும் தொட்டுத் தழுவிச் செல்வதுடன் அவர்களிடமுள்ள அழுக்கையும் தான் பெற்றுக்கொள்வது என்பதே நதியின் இயல்பாகும். ஒருவன் தூற்றினாலோ, மற்றொருவன் போற்றிக் கவிதை பாடினாலோ நதியின் இயல்பில் மாற்றம் எதுவும் வருவதில்லை. ஒருவன் குடிக்கிறான், ஒருவன் குளிக்கிறான், ஒருவன் கால் கழுவுகிறான் - இவர்களில் யாரிடமும் நதிக்குத் தனிப்பட்ட விருப்பம் ஏதுமில்லை. நதியின் இந்த இயல்பு, ஒரு மனிதனின் பார்வையிலும், வார்த்தையிலும், செயலிலும் நிறைந்து வழியும்போது, அதைத்தான் கருணை என்று கூறுகிறோம். அதுவே நமக்குத் தேவை. ஒரு மரத்தை வெட்டினால், பத்துச் செடிகளை நடவேண்டும் என்று கூறுவர். இதில் பொருள் இருக்கிறதா? கட்டடத்தின் தேக்குமரத் தூண்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தீக்குச்சிகளை வைப்பது போன்றதாகும். ஒரு பெரிய மரம் சுற்றுப்புறத்திற்கு நல்கும் தூய்மையையும், குளுமையையும் பத்து அல்லது நூறு சிறிய செடிகளால் தரமுடியாது. ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்குப் பதில் ஒரு மரக்கன்றை நட்டு அது ஓரளவு வளர்ந்து பெரிதாகும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பெரிய மரம் இயற்கைக்குக் கொடுக்கின்ற சமநிலையைச் சிறிய செடியால் தரமுடியாது. ஒரு வாளித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் குளோரின் கலந்தால்தான் நீர் தூய்மையாகும் என்றிருக்க, அதன் நூறில் ஒரு பங்கை மட்டும் கலப்பதால் பலன் என்ன? மரங்களின் அழிவு மனித இனத்தின் அழிவாக இருக்கும். பழங்காலத்தில் காணப்பட்ட பல உயிரினங்கள் இன்று பூமியிலிருந்து அடியோடு துடைத்து நீக்கப்பட்டுவிட்டன. அவற்றால் மாறுபட்ட பருவநிலையில் வாழ முடியவில்லை. அதுபோல் இன்று நாம் இயற்கையைக் கவனிக்கவில்லை என்றால், நாளை நமது நிலையும் இதுதான். பருவநிலையுடன் இணைந்து செல்ல முடியாது. வம்சம் அழியும். மனிதனின் சுயநலம் அந்த அளவு வளர்ந்துவிட்டது. ஓரிடத்தில் மது விற்கும் பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுடைய கணவன் எப்போதும் மனைவியிடம், "ஏய், அதிகமான ஆட்கள் வரவேண்டும் என நீ தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" எனக் கூறுவான். ஒரு நாள் குடிக்கவந்த ஒருவன், இந்தப் பிரார்த்தனையைக் கேட்டான். அவன் அந்தப் பெண்மனியிடம், "எனக்கு அதிகம் வேலை கிடைப்பதற்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்றான். "உங்கள் வேலை என்ன?" என்று அவள் கேட்டதற்கு, "சவப்பெட்டி தயாரித்தல்" என்றான். இதைக் கூறியவனும் ஒருநாள் அந்தப் பெட்டிக்குள் போக நேரிடும் என்பதை அவன் அறியவில்லை. இன்றைய உலகத்தின் நிலையும் இதுவேயாகும்.