Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாந்தி... அமைதி... நிம்மதி... மோனம்...

- அ‌ன்னை

Advertiesment
சாந்தி... அமைதி... நிம்மதி... மோனம்...
, வெள்ளி, 11 ஜூலை 2008 (17:17 IST)
webdunia photoWD
மனத்தில் தெளிவும் உறுதியும், உள்ளத்தில் இறைவனை நோக்கிய உணர்ச்சித் தூண்டுதல் இவையே யோகத்தின் முதல் இரண்டு கருவிகளாகும்‌; சாந்தி, தூய்மை, அமைதி (கீழ்த்தரக் கிளர்ச்சிகளை அடக்குவதுடன்) இவையே அமைக்க வேண்டிய முதல் அடிப்படை. சாதனையின் தொடக்கத்தில் இதைப் பெறுவதே அதிபெளதிக உலகங்களை அல்லது அகக் காட்சிகளைக் காணுதுல், குரல்களைக் கேட்டல், சக்திகள் பெறுதல் இவற்றைக் காட்டிலும் அதிக முக்கியமானது. தூய்மை செய்தலும், அமைதியும் யோகத்தில் முதல் தேவைகளாகும். இவையின்றி (பிற உலகங்களைக் காணல், அகக் காட்சிகள், நாதங்கள் போன்ற) ஏராளமான அனுபவங்கள் ஒருவனுக்கு இருக்கலாம்.

ஆனால், தூய்மையடையாத, கலங்கிய உணர்வில் இவ்வனுபவங்கள் ஏற்படும்போது அவை பொதுவாக கலப்பும் குழப்பமும் நிறைந்தவைகளாகவே இருக்கும்.

ஸ்ரீஅரவிந்தர்

"Peace, Calm, Quiet, Silence" ஆகிய சொற்கள் நுட்பமான பொருள் வேறுபாடு உடையன. அவைகளை விளக்குவது கடினம்.

Peace - சாந்தி
Calm - அமைதி
Quiet - நிம்மதி
Silence -மோனம்

துருதுருப்பும் கலக்கமும் இல்லாத நிலைதான் நிம்மதி. எந்தத் தொல்லைகளும் பாதிக்காத அசையாத தெளிந்த நிலையே அமைதி. இது நிம்மதியை விட எதிர்மறைத்தன்மை குறைந்தது.

சாந்தி இன்னும் அதிக தெளிவான நிலை. அதில் நிலைபெற்ற இசைவுடன் கூடிய ஓய்வும் விடுதலையும் உணரப்படுகிறது.

மோனத்தில் மன, பிராண இயக்கங்களே இரா. அல்லது மேற்பரப்பிலுள்ள எந்த இயக்கமும் உள்ளே செல்லவோ மாற்றவோ முடியாது. பெரும் நிசப்தமாயிருக்கும்.

**

நிம்மதியை இழந்துவிடாதே; சிறிது காலத்திற்கு அது வெற்று நிம்மதியாயிருந்தாலும் பரவாயில்லை. உணர்வு ஒரு பாத்திரம் போன்றது. அதிலுள்ள கலப்புகளை அல்லது வேண்டாத பொருட்களை அடிக்கடி காலி பண்ண வேண்டும். அதைப் புதிய, உண்மையான, சரியான, தூய பண்டங்களால் நிரப்புமுன் சிறிது காலம் காலியாக வைத்திருப்பது அவசியம். கவனமாயிருக்க வேண்டிய ஒரே விஷயம்: பாத்திரத்தை மீண்டும் பழைய மண்டியால் நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், பொறுமையோடிருந்து உன்னை மேல்நோக்கித் திற; அமைதியைக் கெடுக்கக் கூடிய அதிக ஆவல் இல்லாமல், மோனத்தினுள் சாந்தி வருவதற்கு, நிம்மதியாக, நிலையாக அழை; சாந்தி வந்து நிலைத்தபின் ஆனந்தத்தையும் தெய்வ சாந்நித்யத்தையும் அழை.

**


முதலில் ஏதோ எதிர்மறைப் பொருள் போல தோன்றினும், அமைதியைப் பெறுவது மிகக் கடினம். ஆகவே, அதை அடைவதைப் பெரிய முன்னேற்றமாகவே கருத வேண்டும்.

உண்மையில் அமைதி எதிர்மறைப் பொருளன்று. சத்-புருஷனின் இயல்பே அதுதான்; அதுவே தெய்வ உணர்வின் ஆக்கமான அடிப்படை. வேறு எதற்காக ஆர்வமுற்று அடைந்த போதிலும் இதைக் காக்க வேண்டும். ஞானமும், சக்தியும், ஆனந்தமுமே வந்தாலும் அமைதி அடிப்படை இல்லையென்றால் அவை இங்கே தங்க முடியாமல் போய்விடும். சத் - புருஷனின் தெய்வீகத் தூய்மையும், சாந்தியும் நிரந்தரமாக இங்கு நிலை நாட்டப்படும் வரை அவை காத்திருக்க வேண்டியதாகும்.

தெய்வ உணர்வின் பிற தத்துவங்களை எல்லாம் அடைய ஆர்வமுறு. ஆனால், ஆர்வம் ஆழ்ந்த அமைதியுடன் கூடியதாக இருக்கட்டும். அமைதியுடன் தீவிரம் இருக்கலாம்; பொறுமையின்மை, துருதுருப்பு, இராஜச ஆவல் கூடாது.

நிம்மதியான மனத்திலும் ஜீவனிலுமே அதிமன பேருண்மை தனது உண்மையான படைப்பை நிர்ணயிக்க முடியும்.

**

சாதனையில் ஆன்மீக அனுபவம் மனத்தளத்திலிருந்து (mental plane) தொடங்கும் - அனுபவம் உண்மையானதாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டியதொன்றே அவசியமானது.

மனத்தில் தெளிவும் உறுதியும், உள்ளத்தில் இறைவனை நோக்கிய உணர்ச்சித் தூண்டுதல் இவையே யோகத்தின் முதல் இரண்டு கருவிகளாகும்; சாந்தி, தூய்மை, அமைதி (கீழ்த்தரக் கிளர்ச்சிகளை அடக்குவதுடன்) இவையே அமைக்க வேண்டிய முதல் அடிப்படை. சாதனையின் தொடக்கத்தில் இதைப் பெறுவதே அதிபெளதிக உலகங்களை அல்லது அகக் காட்சிகளைக் காணுதல், குரல்களைக் கேட்டல், சக்திகள் பெறுதல் இவற்றைக் காட்டிலும் அதிக முக்கியமானது. தூய்மை செய்தலும்‌; அமைதியும் யோகத்தின் முதல் தேவைகளாகும். இவையின்றி (பிற உலகங்களைக் காணல், அகக் காட்சிகள், நாதங்கள் போன்ற) ஏராளமான அனுபவங்கள் ஒருவனுக்கு இருக்கலாம். ஆனால், தூய்மையடையாத, கலங்கிய உணர்வில் இவ்வனுபவங்கள் ஏற்படும்போது அவை பொதுவாக கலப்பும் குழப்பமும் நிறைந்தவைகளாகவே இருக்கும்.

முதலில் சாந்தியும் அமைதியும் தொடர்ச்சியாக இராமல் வருவதும் போவதுமாயிருக்கும். அவற்றை இயல்‌‌பில் படியச் செய்வதற்கு நீண்ட நாளாகும். ஆதலால், பதற்றமின்றி உன்னுள் நடப்பதைக் கொண்டு தளராது முன் செல்வது நல்லது. சாந்தி, அமைதி இவற்றிற்கு மேல் எதையாவது நீ விரும்பினால் அது உனது உள் ஜீவன் முழுமையாகத் திறப்பதாகவும் உன்னுள் வேலை செய்யும் தெய்வ சக்தியை உணர்வதாகவுமே இருக்கும். சிரத்தையுடனும் மிகத் தீவிரமாகவும் ஆனால் பதற்றமில்லாமலும் ஆர்வமுறு. அது வரும்.

இறுதியில் நீ சாதனையின் உண்மையான அடிப்படையைப் பெற்றுவிட்டாய். ஞானம், வலிமை, ஆனந்தம் முதலிய பிறவெல்லாம் வர இந்த அமைதியும், சாந்தியும், சரணமுமே தகுந்த சூழலாகும். அது நிறைவு பெறட்டும். வேலை செய்யும்போது அது இருப்பதில்லை. ஏனெனில், அது இன்னும் மனத்தளவிலேயே நிற்கிறது. மனம் இப்பொழுதுதான் மோன வரம் பெற்றிருக்கிறது. புதிய உணர்வு முற்றிலும் உருவாகி, பிராண இயல்பையும் தூல ஜீவனையும் முழு உடைமை ஆக்கிக் கொள்ளும் போது (மோனம் இப்போதுதான் பிராணனைத் தொட்டுள்ளது அல்லது அதன் மீது ஆதிக்கம் பெற்றுள்ளது, அதை இன்னும் உடைமைப்படுத்திக் கொள்ளவில்லை) இந்தக் குறை மறைந்துவிடும்.

இப்போது உன் மனத்திலுள்ள நிம்மதியான சாந்தி உணர்வு அமைதியாக மட்டுமின்றி விசாலமாகவும் இருக்க வேண்டும். நீ அதை எங்கும் உணர வேண்டும்; உன்னையும் அனைத்தையும் அதில் உணர வேண்டும்; செயலிலும் அமைதி அடிப்படையாக இருக்க இது உதவும்.

உனது உணர்வு விரிவடையும் அளவிற்கு நீ மேலிருந்து பெற முடியும். தெய்வ சக்தி மேலிருந்து இறங்கி ஆதாரத்தினுள் சாந்தியுடன் வலிமையையும் ஒளியையும் கொண்டு வர முடியும். உன்னுள் குறுகியதாயும் மட்டுப்பட்டதாயும் நீ உணர்வது உனது தூல மனம். இந்த விசால உணர்வும், ஒளியும் இறங்கிவந்து இயல்பை உடைமையாக்கிக் கொள்ளும்போதே அது விரிவடைய முடியும்.

ஆதாரத்தினுள் மேலிருந்து வலிமை இறங்கியபோதே உன்னை வருத்தும் தூல தாமசிகம் குறைந்து பின் மறையும்.

நிம்மதியாயிரு; பெற்ற அமைதியையும் சாந்தியையும் உறுதியாக்குவதற்கும், உணர்வை விசாலப்படுத்தி, அது தற்பொழுது கிரகித்து ஜீரணிக்க முடிந்த அளவு ஒளியையும் சக்தியையும் அதனுள் கொண்டு வருவதற்கும், உன்னைத் திறந்து, தெய்வ சக்தியை அழை.

கவனம்! அதிக ஆவல்படாதே. அது ஏற்கனவே பிராண இயல்பில் நாட்டப்பட்டுள்ள நிம்மதியையும் சமநிலையையும் குலைத்துவிடக் கூடும்.

இறுதி வெற்றியில் நம்பிக்கை வை; தெய்வ சக்தி அதன் வேலையைச் செய்வதற்கு அவகாசம் கொடு.

ஆர்வமுறு, சரியான உணர்வோடு ஒருமுனைப்படு; அப்பொழுது எவ்வளவு தடைகள் ஏற்பட்டபோதிலும் நீ கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெறுவது திண்ணம்.

மனத்தின் பின்னாலுள்ள சாந்தியிலும், உன்னுள் உள்ள "அதிக உண்மையான ஒன்று" என்று குறிப்பிடுகியாயே அதிலும் நீ வாழக் கற்றுக் கொண்டு அதுவே நீ என்று உணர வேண்டும். மற்றதெல்லாம் உன்னுடைய உண்மையான ஜீவன் அல்ல, மாறிக் கொண்டேயிருக்கும் மேலெழுந்தவாரியான இயக்கங்களின் கலவையே அவை, உண்மையான ஜீவன் மலரும்போது அவை போய்விடும் என்று நீ உணர வேண்டும்.

சாந்தியே உண்மையான மருந்து. கடினமான வேலை மூலம் மனத்தை வேறு திசையில் திருப்பி மறக்கடித்தல் தற்காலிகப் பயனையே தரும். ஆனால் ஜீவனின் பல்வேறு பாகங்களிடையே சமநிலை ஏற்படுவதற்கு ஓரளவு வேலை தேவை. சாந்தியைத் தலைக்கு மேலும் தலையைச் சுற்றிலும் உணர்வது முதற்படி. பின்னர் அதனுடன் நீ தொடர்பு கொண்டு, அது உன்னுள் இறங்கி, உனது மனம் உயிர் உடலை நிரப்பி, உன்னைச் சூழ்ந்து கொள்ள வேண்டும். நீ அதிலே வாழ வேண்டும். இந்தச் சாந்தியே இறைவனுடைய சாந்நித்யம் உன்னுடன் இருப்பதற்கு அடையாளம். முதலில் இந்தச் சாந்தி கிடைத்தால் மற்றவையெல்லாம் வரத் தொடங்கும்.

பேச்சில் உண்மை, எண்ணத்தில் உண்மை மிக முக்கியம். பொய்மை உன்னில் ஒரு பகுதி அன்று, அது புற‌த்‌தி‌‌ல் இருந்து வருகிறது என்று உணர முடிந்தால் அதை விலக்கி ஒதுக்குவது எளிதாயிருக்கும்.

விடாது முயற்சி செய், இன்னும் கோணலாக இருப்பவையும் நேராக்கப்படும். அதன்பிறகு, இறைவனது சாந்நித்யத்தை இடைவிடாது உணர்வாய்; நேரடியான அனுபவம் உனது நம்பிக்கை சரியானதே என்று காட்டும்.

முதலில் மனநிம்மதி, தூய்மை, அமைதி, சாந்தி, விழிப்புற்ற உணர்வு, தீவிர சக்தி, உள்ளேயும் வெளியேயும் உள்ள கஷ்டங்களைச் சந்தித்து இறுதிவரை யோகத்தைச் சாதனை செய்வதற்கு வேண்டிய வலிமையும் ஆன்மீகத் திறனும் - இவைகளுக்காக ஆர்வமுற்று, அன்னையை நோக்கிப் பிரார்த்தனை செய். உணர்வு விழித்தெழுந்து, பக்தியும் ஆர்வத் தீவிரமும் இருக்குமானால், மனம் - அது நிம்மதியாக இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் - ஞானத்தில் வளர முடியும்.

மொழி பெயர்ப்பு : ச. மகாலிங்கம்


Share this Story:

Follow Webdunia tamil