Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கந்த சஷ்டி விழாவை காண திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

கந்த சஷ்டி விழாவை காண திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:25 IST)
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.  இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி விழாவின் 6 ஆம் நாளான இன்று திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்வை காண குவிந்துள்ள பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர்.
 
இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல்  கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
 
பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் நகர் முழுவதும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் 70 சி.சி.டி.வி கேமிராக்கள், 10 எல்.இ.டி.டிவிக்கள் ஆகியவைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை மணல் பகுதியில் ரோந்து செல்லக்கூடிய  இரண்டு ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலினுள் 6 பைபர் படகுகள் நிறுத்தப்பட்டு கடலில் குளிக்கும் பக்தர்களை  கண்காணிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (13-11-2018)!