வல்லக்கோட்டை சுப்ரமணியஸ்வாமி திருக்கோயில் குடமுழுக்கு இன்று காலை வெகு விமர்சையாக நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ளது வல்லக்கோட்டை அருள்மிகு வள்ளி தேவசேன உடனுறை சுப்ரமணியஸ்வாமி திருக்கோயில். இந்த ஆலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இக்கோயிலின் மூலவர் விமானம், 5 நிலை ராஜகோபுரம் உள்ளிட்டவைகளில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி இன்று காலை 8.00 மணியளவில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்தது. வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க, கோபுரக் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றினர்.
இன்று மாலை திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேகம், ஸ்வாமி திருவீதியுலா ஆகியவை நடைபெறவுள்ளன.
குடமுழுக்கு நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.