புட்டபர்த்தி சத்ய சாய் பாபா மகிமை!
சத்யம்... சிவம்... சுந்தரம்... சத்ய சாய் பாபா!சிவலிங்கம் ஒன்று, அவரது கையில் இருந்து வழங்கப்படுகிறது.தினமும், விபூதியை கைகளில் இருந்து வெளிப்படுத்துகிறார்.ஆம். அவர்தான், பிரசாந்தி நிலையத்தின் சத்ய சாய் பாபா!இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம் புட்டபர்த்தி. தற்போது இக்கிராமம் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்றிருப்பதற்குக் காரணம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்றால் மிகையில்லை.பகவான் சாய் பாபாவின் மீது அதீத பற்றுகொண்ட பக்தர்களால் புட்டபர்த்தியில் பாபாவுக்காக கட்டப்பட்டுள்ள ஆசிரமம் `பிரசாந்தி நிலையம்' என்று அழைக்கப்படுகிறது. அமைதி தவழும் நிலையம் என்பதே இதன் பொருள்.நாட்டின் மிக முக்கிய சுற்றுலா யாத்திரை தலங்களில் ஒன்றாக புட்டபர்த்தி விளங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சாய் பாபாவின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.ஒருகாலத்தில் பெயரே கேள்விப்படாத மிகவும் சின்னஞ்சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தியில் இன்று, விமான நிலையம், பன்முக நவீன தொழில்நுட்ப மருத்துவமனை, புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் என ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் நகரமாக மாறி விட்டது.சாய் பாபாவின் அருளைப் பெறுவதற்காக அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வந்து காத்திருக்கிறார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற தன்னலமற்ற தொண்டர்களும், ஊழியர்களும் பாபாவின்
அருளைப் போற்றி பஜன் உள்ளிட்ட பாடல்களைப் பாடுவதுடன், தினமும் வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை போதிக்கும் கொள்கைகளின்படி சாய் பாபாவின் போதனைகளும் விளங்குகின்றன. உண்மை, நேர்மை, அமைதி உலக மக்களிடத்தில் அன்பு, சாத்வீகம் போன்றவையே பக்தர்களுக்கு பாபாவின் போதனைகளாக உள்ளன.
கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகம், விண்வெளி மையம் போன்றவை ஆசிரமத்தில் அடங்கியுள்ளன. ஆண்டுதோறும் நவம்பர் 23ஆம் தேதியன்று பிரசாந்தி நிலையம் வண்ணமயமாக, அழகுடன் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூணும். காரணம் அன்றைய தினம் சாய் பாபாவின் பிறந்த நாளாகும்.
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற எண்ணற்ற பிரபலங்கள் புட்டபர்த்திக்கு வந்து சிறப்பித்தவர்களில் அடங்குவர்.
சாய் பாபாவின் 80ஆவது பிறந்தநாள் விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து கலந்து கொண்டதுடன், 180 நாடுகளில் இருந்து 13 ஆயிரத்திற்குமே மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்றது சிறப்பு மிக்கதாகும்.
புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய ஆசிரமத்திலேயே சாய் பாபா பெரும்பாலும் தங்கியிருப்பது வழக்கம்.
இந்தியாவில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்காக சாய் பாபா மூன்று ஆசிரமங்களை நிறுவியுள்ளார். முதலாவது மும்பையில் `தர்மஷேத்ரா' அல்லது `சத்யம்' என்ற பெயரில் செயல்படுகிறது.
இரண்டாவதாக ஹைதராபாத்தில் `சிவம்' என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தையும், சென்னையில் `சுந்தரம்' என்ற பெயரிலும் ஆசிரமத்தை நிறுவியுள்ளார்.
சென்னையில் உள்ள சுந்தரம் ஆசிரமமானது பஜன்ஸ்-க்கு பெருமை வாய்ந்தது. இதுவரௌ 54 தொகுதிகளாக ஒலிநாடா, சி.டி.க்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் 54வது தொகுதியில் அடங்கிய பஜனில் பாபா பாடியுள்ளார்.மேலும் எண்ணற்ற இலவச கல்வி நிறுவனங்களையும், அறக்கட்டளை அமைப்புகளையும், சேவைத் திட்டங்களையும் சாய்பாபா ஏற்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 166 நாடுகளில் அடங்கிய 10 ஆயிரம் மையங்கள் இவற்றை நிறுவி பராமரித்து வருகின்றன.அன்றாட நிகழ்ச்சி: சத்ய சாய் பாபாவின் ஆசிரமத்தில் ஓம் மந்திரத்துடன் காலையில் சுப்ரபாத இறைவணக்கம் பாடப்படும். தொடர்ந்து வேத பாராயணம், காலையில் பக்திப் பாடல்கள் பாடுதல், தினமும் இருமுறை பஜனைகள்,
பின்னர் சாய் பாபா தரிசனம் இடம்பெறும். இதுவே ஆசிரமத்தில் அன்றாட நிகழ்ச்சி.
தரிசனத்தின் போது சாய் பாபா பக்தர்களுக்கு மத்தியில் நடந்து வந்து, சிலருடன் உரையாடுவார். கடிதங்கள், பொருட்களைப் பெற்றுக் கொண்டு பக்தர்களுக்கு விபூதி அளிப்பார்.
குறிப்பிட்ட குழுக்களிடம் பேசுவார். அதனை சாய் பாபாவே முடிவு செய்வார். பாபாவின் பக்தர்கள் தங்களிடம் அவர் பேசுவதை மிகுந்த பெருமையாகவும், தங்களின் பாக்கியமாகவும் கருதுகிறார்கள்.
சில நேரங்களில் தனி நபர் அல்லது குடும்பத்தினர் அல்லது ஒரு சிலர் அடங்கிய குழுவை அழைத்து தனிப்பட்ட முறையில் பாபா பேசுவார்.
தம்மைக் காண வரும் பக்தர்களுக்கு தாம் ஆன்மீக பலன்களை அளிப்பதாக பாபா கூறுகிறார். துறவிகள், குருமார்களை வழிபடுவதைப் போன்று சாய் பாபாவை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
``நான் கடவுள். நீயும் கடவுள்தான். உனக்கும் எனக்கும் உள்ள ஒரே வேறுபாடு. நான் என்னை அறிந்துள்ளேன். நீ அறிந்திருக்கவில்லை'' என்பதே பாபாவிடம் அவரது அடையாளமாக பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் தரும் பதில்.
தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்பவர்கள் சாய் பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ள புட்டபர்த்திக்கு செல்லாமல், அவர்களின் பயணம் நிறைவடையாது.
சாய் பாபா பிறந்த ஊரில் சத்யபாமா கோயில், சிவன் கோயில் உள்ளது. கல்பவிருட்சம் எனப்படும் சித்ராவதி ஆறும் அங்கு பாய்கிறது. பாபாவின் அதிசய மரமான புளியமரம், சத்ய சாய் சிறப்பு மருத்துவமனை போன்றவற்றையும் ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும்.
புட்டபர்த்திக்குச் செல்ல...
சாலை மார்க்கம்: ஆந்திராவின் அனந்தப்பூரில் இருந்து 80 கி.மீட்டர்.
ரயில் : அனந்தப்பூர் ரயில் நிலையம், இங்கிருந்து 80 கி.மீ. தொலைவில் புட்டபர்த்தி.
விமான நிலையம்: ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்கள். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 120 கி.மீ.