பொதுவாக மார்கழி மாதத்தில் பனியும், மூடுபனியும் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த ஆண்டில் மார்கழி பிறந்ததற்குப் பின்னும் மழை தொடர்கிறதே? ஜோதிட ரீதியாக இதற்கு காரணம் கூற முடியுமா?
குரு பகவான் அமர்ந்து எந்தெந்த நட்சத்திரங்களை, ராசிகளை பார்க்கின்றாரோ அந்தந்த நட்சத்திரங்களின் நாட்களில் மழை பெய்யும். இது பொதுவான ஜோதிட உண்மை.
மழை நட்சத்திரங்கள் என்றே பல உள்ளன. பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், பூராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன மழை நட்சத்திரங்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
இந்த நட்சத்திர நாட்களில், அது கோடையாக இருந்தாலும் பெருமளவிற்கு மழை பெய்யாவிட்டாலும் சற்று மேகமூட்டமாவது காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும். குளிர்ச்சியாகவும் இருக்கும். இந்த நிலை அந்தந்த ஊரில் கிரக அமைப்பைப் பொறுத்து மில்லி மீட்டர் அளவிற்கோ, சென்டிமீட்டர் அளவிற்கோ மாறுபட்டு மழை பெய்யும்.
குரு தற்போது தனுசு வீட்டில், அவருடைய சொந்த வீட்டில் உள்ளார். ஆயினும் தற்பொழுது மழை பொழிவதற்கு காரணம் சனி சிம்ம ராசியில் தொடர்வதுதான்.
சந்திரனும், சூரியனும், செவ்வாயும் சனிக்கு பகைக்கோள்களாகும். சந்திரன் வீடு கடகம், சூரியன் வீடு சிம்மம், கடகத்தை ஆழி (கடல்) என்பார்கள். இங்குதான் சனி கடந்த 21/2 ஆண்டுகளாக இருந்தது. அது பகை வீட்டில் இருந்ததன் விளைவாக கடல் பொங்கி எழுந்தது. கடல் பகுதிகள் நிலப்பகுதிகளாக மாறின.
30 வருடங்களுக்கு ஒரு முறை கடக ராசிக்கு சனி வருகிறது. அப்பொழுதெல்லாம் சுனாமி வந்ததா என்று கேட்கலாம். அப்பொழுதெல்லாம் குருவின் பார்வை சனிக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அதனால் தனிந்த நிலையில் சனி இருந்தது. தற்பொழுது சிம்மத்தில் சனி உட்கார்ந்திருப்பதால் இப்படிப்பட்ட பருவநிலை மாறிய நிலைக் காணப்படுகிறது. சூரியனை வைத்துத்தானே பருவ நிலையை முடிவு செய்கின்றோம். அந்த சூரியனின் ராசியான சிம்மத்தில் சனி அமர்ந்திருப்பதால் பருவம் மாறுகிறது.
சூரியன் அதி உஷ்ணமான கோள், சனி கார்பன் மோனாக்சைடு (பனி), சூரியனின் வெம்மையைத் தணிக்கின்ற அளவிற்கு வரலாறு காணாத உறை நிலை தற்பொழுது காண்கின்றோம். சூரியனை தற்பொழுது சனி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. பருவ நிலை மாறி மழை பொழிய வைக்கிறது. அதனால் பூமியின் தட்ப வெப்ப நிலை மாறுகிறது.
சூரியன் தனது கதிர்களை சனியின் மீது செலுத்த, சனி தனது கதிரை சூரியன் மீது செலுத்த தற்பொழுது ஒரு பெரும் கதிர்வீச்சு யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் உறை நிலை, பாலைவனத்தில் மழை, பருவம் தவறிய மழை, அதிகமான வெள்ளம் ஆகியன ஏற்படுகின்றன.
இதன் மூலம் தனது எதிரி கிரகமான (பூமிக்காரன்) செவ்வாயை பழி தீர்க்கிறது. புவியில் ஒரு சீரான சீதோஷ்ணம் நிலவ விடாமல் நிலைகுலையச் செய்து கொண்டிருக்கிறது.
சனி சிம்மத்தில் இருப்பதால் இப்பொழுது கூட, அதாவது மார்கழியிலும் மழை பொழிவதற்குக் காரணமாகும்.
இந்த நிலை எப்போது மாறும்?
2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சனி பெயர்கிறது. அப்பொழுது அது புதன் வீட்டிற்குச் செல்கிறது. அது அதற்கு நட்பு வீடு. புதன் வாயுக் கிரகமாதலால் அப்பொழுது காற்று அதிகரிக்கும்.
மிதுனமும், கன்னியும் புதன் வீடாகும். மிதுனத்தில் இருக்கும்போதுதான் பூமியின் பல இடங்களில் கடுமையாக காற்று வீசியது. கேட்ரினா சூறாவளி அப்பொழுதுதான் தாக்கியது. இந்த நிலை கன்னி ராசிக்கு வரும்போது மீண்டும் ஏற்படலாம்.