புலிகள் தலைவர் பிரபாகரனின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
பிரபாகரனின் ஜாதகம் வலுவானது என்பதில் ஐயமில்லை. அவருடைய ராசி விருச்சிகம். அவரின் ராசிநாதன் செவ்வாய் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அப்படி இருப்பதால் அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. வயது எண்ணிக்கையில் கூற வேண்டுமென்றால் அவர் 69 முதல் 75 ஆண்டுகள் வரை வாழ்வார்.
அவரின் போராட்டப் பயணம் எந்தக் காலத்திலும் தடைபடாது. அவரது எண்ணங்களில் மாற்றமோ, முன்வைத்த காலை பின்வைப்பதோ விருச்சிக ராசிக்கு பொருந்தாது. விருச்சிகத்திற்கு உரிய அடையாளம் தேள். பொதுவாக தேள் எப்படி இறுதி வரை போராடுமோ அதேபோல் அந்த ராசிக்காரர்களுக்கும் அந்த குணம் உண்டு.
பிற உயிரினத்துடனான சண்டையின் போது உடல் பாகங்களை இழந்தாலும் தேள் மீண்டும் மீண்டும் போரிடும். ஜீவராசிகளில் இதுபோன்ற உக்கிரத்தன்மையை தேளிடம் மட்டுமே அதிகம் பார்க்க முடியும். விருச்சிக ராசியை உடையவர்களுக்கும் இந்தத் தன்மை இருக்கும் என்பதால் தமிழீழத்திற்காக அவர் இறுதி வரை போராடுவார்.