இச்சம்பவம் முற்றிலும் ஜோதிட ரீதியிலான நிகழ்வுதான். தீப்பிடித்து எரிந்த கடை (சரவணா ஸ்டோர்ஸ்) பல்வேறு தரப்பு மக்கள் வந்து செல்லும் பிரபல வணிக ஸ்தாபனம். சாதாரணமாக விபத்து ஏற்படக் கூடாத, அதே சமயம் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட இடத்தில் கன்னிச் செவ்வாயின் ஆதிக்கத்தால் இந் த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சரவணன் என்பது முருகனின் பெயர்களில் ஒன்று. அவருக்கு உரிய கிரகம் செவ்வாய். தற்போது செவ்வாய் கன்னி ராசியில் உள்ளதால் கன்னிச் செவ்வாய் எனக் குறிப்பிடப்படுகிறது.
தற்போது கன்னிச் செவ்வாயுடன், சுக்கிரனும் இணைந்துள்ளார். பொதுவாக சுக்கிரன் ரங்கனுக்கு (ஸ்ரீரங்கநாதர் - பெருமாள்) உரிய கிரகம். கன்னிச் செவ்வாய் கடல் நீரையும் வற்றச் செய்யும்.
கன்னியில் செவ்வாய் வந்து அமர்ந்தாலே பெரும் விபத்துகள், அரசியல் அவலங்கள் (கூட்டணி முறிவு, எதிரும் புதிருமாக இருப்பது, பழிவாங்கும் படலங்கள்) ஏற்படும். அக்னிக்கு உரிய கிரகமும் செவ்வாய். கடந்த காலத்தில் செவ்வாய் கன்னியில் அமர்ந்த போது பெரும் விபத்துகள் ஏற்படாவிட்டாலும், தற்போது நெருப்பு கிரகமான சூரியன் வீட்டில் சனி அமர்ந்துள்ளார்.
அதாவது சிம்மத்தில் சனியும், கன்னியில் செவ்வாயும் அமரும் போது கோர விபத்துகள் நிகழும்.
செவ்வாய்க்கு சரவணன், சுக்கிரனுக்கு ரங்கநாதன். இதன் காரணமாகவே ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் பாத்திரக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சுக்கிரனும், செவ்வாயும் இன்னும் சில நாட்கள் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதால் மேலும் சில தீ தொடர்பான கோர விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
செப்டம்பர் 21ஆம் தேதி சுக்கிரன் இடம் மாறுகிறார். கன்னியில் உள்ள செவ்வாய் 26ஆம் தேதி வரை பாதிப்பை ஏற்படுத்துவார். பெருமாள், ரங்கநாதன், முருகன் பெயரில் உள்ள வணிக ஸ்தாபனங்கள் விபத்துகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சரவணன், ரங்கநாதன் போன்ற பெயர்களை உடையவர்களுக்கும் பாதிப்பு இருக்குமா?
செப்டம்பர் 26ஆம் தேதி வரை இப்பெயரை உடைவர்கள் எச்சரிக்கையாக இருந்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம். அறுவை சிகிச்சை, உடல்நல பாதிப்புகள் இருக்கும். விபத்துகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.