மாணவர்களின் கல்வி கற்கும் அணுகுமுறையில் கிரகங்களின் தாக்கம் இருக்கிறதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
சிறு வயது முதலே கற்பூரம் போன்ற புத்தியுடன் காணப்படும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஆனால், ஒரு சில மாணவர்கள் சிறுவயதில் நன்றாக படிக்காத போதும், குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் புரிந்து கொண்டு பயிலும் ஆற்றலைப் பெற்று மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பில் முத்திரை பதிக்கின்றனர். இந்த இரு தரப்பு மாணவர்களையும் ஜோதிட ரீதியாக அணுகுவது எப்படி?
பதில்: புகழ்பெற்ற கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றும் பெண்மணி சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 2 மகன்கள். அதில் மூத்த மகனின் ஜாதகத்தைப் பார்த்ததில் அவர் புத்தகப் புழுவாக இருப்பார் என்பது தெரியவந்தது. இளைய மகனின் ஜாதகத்தைப் பார்த்ததில் (மோசமான தசா புக்தி நடந்து கொண்டிருந்தது) அவர் தேர்வுத் தேதி அறிவித்த பின்னரே புத்தகத்தை கையில் எடுக்கும் ரகம் எனத் தெரிந்து கொண்டேன்.
பின்னர் அந்தப் பெண்மணியிடம் பேசிய நான், உங்கள் இளைய மகனைக் காட்டிலும், மூத்த மகன் சற்று அதிகம் படிப்பது போல் தோன்றினாலும், இளைய மகனுக்கு உள்ள அறிவாற்றல் (ஐ.கியூ) மூத்த மகனுக்கு இருக்காது என்றேன். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். இளைய மகனை விட மூத்த மகன் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்பதே அவர் கூறிய காரணம்.
அறிவாற்றலையும், கல்வி பயிலுவதையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும். உளவியலாளர்கள், கல்வியாளர்களைப் பொறுத்தவரை, மீத்திரக் குழந்தைகள் (Gifted Childrens) என்று ஒரு சில குழந்தைகளைக் குறிப்பிடுகின்றனர்.
ஆசிரியர், புத்தகம், கைடு ஆகியவற்றின் துணையுடன் பாடத்தை புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்களே மீத்திரக் குழந்தைகள். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் அறிவாற்றல் அளவு அதிகமாக இருக்காது. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இருக்கலாம்.
பொதுவாக ஐ.கியூ அதிகமுள்ள குழந்தைகள் பாடத்தில் முழுமையாக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பதில் கேள்வி எழுப்புவர்.
லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, வாக்கு அதிபதி வாக்கு ஸ்தானத்தில் இருப்பது போன்ற அமைப்பைப் பெற்ற குழந்தைகளுக்கு, நல்ல தசாபுக்தி நடைபெறும் போது நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எளிதாகப் பெறுவார்கள். தடைகள் ஏற்படாது.
நல்ல மதிப்பெண் பெற்றதால் புகழ்பெற்ற கல்லூரியில் மேற்படிப்பு. அங்கிருந்து சிறந்த நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு பணியில் சேரும் இவர்கள், தங்களின் வாழ்க்கையை சுருக்கிக் கொள்கின்றனர். இவர்களில் சிலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்படும் போது அதனை தீர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலருக்கு வாழ்க்கையே சின்னாபின்னமாகி விடுகிறது.
ஐ.கியூ. அதிகமுள்ள மாணவர்கள் படிப்பில் சுமாராக இருந்தாலும், குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார்கள். அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட பாடத்தை நடத்தும் ஆசிரியர் பயிற்றுவிக்கும் முறை வித்தியாசமானதாக, அந்த மாணவருக்கு பிடித்தமான முறையில் இருக்கும்.
கல்வியில் கூட தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான விடயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவர். எனவே ஐ.கியூ அதிகமுள்ள மாணவர்கள் தங்கள் வாழ்வில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
கல்வி என்பது மனம் தொடர்பானது. எனவே, மாணவர்களை கல்வி கற்கும் சூழலுக்கு ஆசிரியர்கள் முதலில் ஊக்கப்படுத்தி தயார்படுத்த வேண்டும். எனினும் ஒவ்வொரு மாணவனின் ராசி, நட்சத்திரம், தசா புக்தி என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியாது.
பெற்றோர்தான் தங்களது மகன், மகளுக்கு என்ன தசாபுக்தி நடக்கிறது என்று கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.