ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் போது பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் ஒரு இடத்தில் (கட்டத்தில்) ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இருப்பது உண்டு.
webdunia photo
WD
குழந்தை பிறந்த லக்னத்திற்கு எத்தனையாவது வீட்டில் அந்த ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் கூட்டணி அமைகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, ரிஷப வீட்டில் 6 கிரகங்கள் (உதாரணத்திற்கு) இருந்து, அந்தக் குழந்தை ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தால், அக்குழந்தைக்கு அசாத்தியமான திறமைகள், பலன்கள், சக்திகள் கிடைக்கும்.
பத்து வயதிலேயே 18 வயதுக்குரியவர்களுக்கான அறிவு முதிர்ச்சியும், படிப்பில் மிக சுட்டியாகவும் அந்தக் குழந்தை இருக்கும்.
ஆனால் அதே 6 கிரகங்கள் லக்னத்திற்கு 6ல், 8ல், 12ல் மறைந்தால் அக்குழந்தைக்கு உடனடிப் பலன்களைத் தராமல், மிகத் தாமதமான பலன்களையே அந்த ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் கூட்டணி வழங்கும். 30 வயதிற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை சிறப்பாகும்.
எனினும், 7, 8ம் இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் கூட்டணி இருந்தால், ஜாதகரின் திருமணத்தில் பல்வேறு தடைகள் ஏற்படும். இதுபோன்ற சில சிக்கல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் கூட்டணியால் உருவாகும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் கூட்டணி லக்னத்தில் இருந்தால் பரிபூரண ஆயுள், நிர்வாகத்திறன் இருக்கும். 2ம் இடத்தில் அமைந்தால் பல மொழிகள் பேசும் திறன், பல பாடப் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெறுதல் போன்றவை இருக்கும். 3ம் இடத்தில் இருந்தால் அதிக சகோதரர்கள் இருப்பார்கள்.
நான்காம் இடத்தில் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கும், கட்டும் யோகம் கிடைக்கும். 5ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு அதிக குழந்தைகள் பிறப்பார்கள். 6ல் இருந்தால் மறைமுக எதிர்ப்பு, வழக்குகள், நோய் தொந்தரவுகள் கொடுக்கும். 7, 8ல் இருந்தால் திருமணத் தடை.
எனவே கூட்டு கிரக சேர்க்கை என்பது ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் லக்னத்தில் இருந்து எந்த வீட்டில் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து சிறப்புப் பலன்கள் அல்லது கெடு பலன்கள் கிடைக்கும்.
திருமணத் தடை தவிர்க்க: இப்போது லக்னத்திற்கு 7, 8வது இடத்தில் கூட்டு கிரக சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்களுக்கு திருமணத் தடை ஏற்பட்டாலும், தங்கள் கணவன்/மனைவியாகப் போகும் ஜாதகரை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினால் (ஜாதகரீதியாக பொருத்தம் பார்த்து) அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.