உத்தியோகஸ்தானம், கர்ம ஸ்தானம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. விதியாகிய லக்னத்திற்கு 10வது இடத்தில் இருப்பதுதான் உத்தியோக ஸ்தானம். அதில் ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
பண்டைய காலத்திய பல நூல்களில் இதுபற்றி விரிவாகக் கூறப்பட்டிருக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில் 10ஆம் இடம்தான் உத்தியோகஸ்தானம். 10ஆம் இடத்தில் நின்ற கிரகம், 10ஆம் இடத்தைப் பார்த்த கிரகம், 10ஆம் வீட்டு கிரகத்துடன் தொடர்புடைய கிரகம் இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்தும், தற்போது நடக்கும் தசா புக்தியை வைத்தும் சொல்லப்படுகிறது.
பொதுவாக சூரியனும், செவ்வாயும் 10வது வீட்டில் இருந்தால் ஒரு வேலையும் பார்க்க மாட்டார்கள். 3 மாதத்திற்கு ஒரு கம்பெனி மாறுவார்கள். 10ல் சனி இருந்தாலும் பல தொல்லைகள் ஏற்படும். “காரியவன் காரியத்தில் அமர காரிய பங்கம ் ” என்று சொல்லப்படும். காரியவன் என்பது சனி. காரிய ஸ்தானம் 10. சனி 10ஆம் இடத்தில் அமர்ந்தாலும் வேலை பிரச்சினைக்குள்ளாகும்.
அந்த 10ஆம் வீடு கடகம், சிம்மமாக இருந்தாலோ மேஷம், விருச்சிகமாக இருந்தாலோதான் இந்த பிரச்சினைகள். மற்றவையாக இருந்தால் நிரந்தரப் பணியை அந்த நேரத்தில் சனி கொடுக்கும்.
10 வது வீட்டில் சூரியன் இருந்தால் பெரிய அரசியல் தலைவராகவோ, முதலமைச்சர் போன்ற பதவிகள் வகிப்பர். பச்சை மையில் கையெழுத்து போடுதல், அரசு நிர்வாகத்தில் பெரிய பதவியில் இருப்பார்கள்.
10 ல் சந்திரன் இருந்தால் அதற்கேற்றபடியான பணிகள் அமையும்.
ஒரு சிலர் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். நல்ல தசா புக்தி நடக்கும்போது அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்குவார்கள்.
10 ஆம் இடத்தை வைத்து எந்த மாதிரியான வேலை என்பதை கண்டறிய முடியும். ஆனால் அவ்வப்போது மாறும் தசா புக்திகளை வைத்து தொடர்ந்து அதில் நீடிப்பார்களா, வேலையில் இருந்து நீக்கப்படுவார்களா, பணி முன்னேற்றம் அடைவார்களா, சுய தொழில் செய்வார்களா என்பதை பார்க்க முடியும்.
பொதுவாக 10ல் சந்திரன் இருந்தாலே மிகப்பெரிய பதவிகளில் வருவார்கள். கல்லூரி பேராசிரியர், மருத்துவமனையின் பொறுப்பாளராக இருப்பது போன்ற பதவிகள் வகிப்பார்கள்.
10 ல் செவ்வாய் இருந்தால் காவல்துறையில் மிகப்பெரிய பதவி, ராணுவத்தில் தளபதி போன்ற பதவிகள் வகிப்பார்கள்.
ஆனால் எல்லோருமே 10ல் செவ்வாய் இருந்தால் இதுபோன்று பதவிகள் வகிப்பார்களா என்று கேட்டால் கிடையாது. அதற்கு அவர்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறார்கள். அந்த லக்னத்திற்கு 10வது வீடாக யாருடைய வீடு இருக்கிறது. அந்த வீடு செவ்வாய்க்கு உச்ச வீடா, பகை வீடா அதெல்லாம் பார்க்க வேண்டும். செவ்வாய்க்கு எதிர்கோள்கள் 10ஆம் இடத்தைப் பார்த்தால் எதிர்மறையாக அமையும்.
10 ல் செவ்வாய் இருந்தால் காவல்துறை, ராணுவத்தில் இருப்பார்கள் என்று சொல்வது போல், செவ்வாயை பகைக் கோள் பார்த்துக் கொண்டிருந்தால் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக இருப்பார்கள்.
இதுபோலத்தான் ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பை வைத்து வேலை அமையும்.