Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிட ரீதியில் விவாகரத்து என்பது...

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (16:30 IST)
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன் :

வாழ்க்கைத் துணையின் அமைப்பு நமது கிரகத்தை வைத்துத்தான் அமையும். நாம் ஆடு, மாடு வாங்குவது கூட கிரகத்தை வைத்துத்தான் இருக்கிறது. நல்ல கிரக அமைப்பு இல்லாவிட்டால் நாம் வாங்கும் ஆடு, மாடு கூட சரியாக அமையாது.

மேலும் லக்னாதிபதி மிகவும் முக்கியம். ஒருவர் பிறக்கும்போது அந்த நேரத்திற்கான லக்னாதிபதியைப் பார்க்க வேண்டும். மேஷ லக்னமா, ரிஷப லக்னமா என லக்னத்தை பார்க்க வேண்டும். அந்த லக்னம் சுபத் தன்மை பெற்று சுப கிரகங்களுடன் சேர்க்கை, சுப நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் அவரது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

7 ஆம் இடம், 8ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் -சின்ன சின்ன சண்டைகள் நடக்கும், அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையாது. ஆனால் ஒரு சிலருக்கு அவ்வாறு அமைந்தும் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்குக் காரணம் சுக்ரன் வலுவாக இருக்கும். சுக்ரன் களத்திரக் காரகன். சிறப்பான துணைக்கு சுக்ரன் தான் காரணம். சுக்ரன் நல்ல விதத்தில் சுபத் தன்மை பெற்றிருந்தால் 7வது, 8வது இடத்தில் பாவ கிரங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும்.

ஆனால் சுக்ரனும் கெட்டு, 7வது, 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் விவாக ரத்து நடக்கும்.

சில ஜாதகங்களை நாம் ஆராய்ச்சிக்குட்படுத்துவோம். அதில் சுக்ரன் சிறப்பாக இருந்தும், 7வது 8வது இடங்களில் நல்ல கிரகங்கள் இருந்தும் விவாகரத்து ஆனவர்களும் இருப்பார்கள்.

அதற்குக் காரணம், இருவருக்கும் அஷ்டமத்து சனி தசை நடக்கும்போது திருமணம் நடந்திருந்தால் இதுபோன்ற நடக்க வாய்ப்பு உண்டு. மாப்பிள்ளைக்கு அஷ்டமத்து சனி, பெண்ணுக்கு ஏழரை சனி நடந்தாலும் அவர்கள் பிரிந்துவிடுவார்கள்.

அப்பாவால் பிரிந்தவர், அம்மாவால ் பிரிந்தவர், சகோதரனால் பிரிந்தவர்களும் உண்டு.

ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு தனுர் லக்னம், லக்னாதிபதி குரு, களத்ரக் காரகன் சுக்ரன். குருவும், சுக்ரனும் ஒரே வீட்டில் அமர்ந்திருந்தார்கள். அந்த பெண்ணுக்கு கணவனா? தாயாரா? யாருக்கு முக்கியத்தவம் தருவது எ‌ன்ற ‌பிர‌ச்‌சினை.

ஒரே மகள், அம்மாவையும் விட்டுவிட்டு தனியே போய் விட முடியாது. அம்மாவுடன் இருந்தால் கணவர் கோபித்துக் கொள்கிறார். அப்போது 6ஆம் இடத்திக்குரியவன் பிரச்சினைகளை உருவாக்கக் கூடியவன். 6ஆம் இடத்திற்குரிய கிரகத்தின் தசை நடந்தாலும் பிரிவுக்கான சாத்தியம் உண்டு.

பெரும்பாலும் விவாகரத்து நடக்கும் என்று ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போதே கணித்து விடுவோம். அதைச் சொல்லி திருமணம் வேண்டாம் என்று கூறினால் அதற்காக வருத்தப்படுபவர்கள்தான் அதிகம்.

ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்தால் போதும் என்றுதான் பலர் வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை எல்லாம் விட்டுவிடுகின்றனர்.

சிலர் அதையும் மீறி திருமணம் செய்துவிட்டு, பின்னர் விவாகரத்துக்கு நீதிமன்றம் செல்லும் தருவாயில் என்னிடம் வந்து புலம்புபவர்களும் உண்டு.

சமீபத்தில் ஒரு ஜாதகப் பொருத்தம் பார்த்ததில் 10க்கு 9 பொருத்தம் இருந்தது. ஆனால் பெண்ணிற்கு ஏழரைச் சனி, ஆணிற்கு அஷ்டமத்துச் சனி.

பொருத்தம் இருந்தாலும் சனி தசை நடப்பதால் திருமணம் வேண்டாம் என்று கூறினோம். பெண் கன்னி ராசி - ஏழரை சனி துவங்கியுள்ளது. ஆண் மகர ராசி அஷ்டமத்து சனி நடக்கிறது. இரண்டு பேரையும் சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் சீக்கிரமே பிரிந்து விடுவார்கள் என்று கூறினேன். அஷ்டமத்து சனியையும், ஏழரை சனியையும் சேர்த்துவிட்டால் மூன்று மாதத்திலேயே பிரிந்து விடுவார்கள் என்றும் சொன்னேன்.

ஆனால் ஜாதகத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு அதை ஏற்க முடியவில்லை. மற்றொரு ஜோதிடர் பொருத்தம் இருக்கிறது என்று கூறியதை சொன்னார்க‌ள். ஒரு ஜோதிடராக நான் என்ன சொல்ல வேண்டுமோ அதைத்தான் சொன்னேன். அதை ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம் என்று கூறிவிட்டேன்.

இதேபோன்று 2 மாதங்களுக்கு முன்பு ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடப்பவர்களுக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியும் அவர்கள் நடத்த முயற்சித்தனர். ஆனால் நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டது.

அதாவது மக்கள் தங்கள் மனதில் என்ன நினைத்து வருகிறார்களோ அதைச் சொன்னால் நல்ல ஜோதிடர் என்று சொல்கிறார்கள். வேண்டாம் என்று எதிர்மறையாகக் கூறினால் அதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

ஒரு சில ஜாதகத்தில் தாலி கட்டிய நேரத்தில் இருந்து தவறான நடவடிக்கைக்கு மாறும் வகையில் கிரக அமைப்புகள் இருக்கிறது. ஒரு சிலர் திருமணத்திற்குப் பின் அமைதியாக மாறுவதும் கூட உண்டு.

அதேபோல ஜாதகம் பொருந்தவில்லை என்றாலும் சமமான ராசியாக இருந்தால் பரஸ்பரம் சண்டை போட்டுக் கொண்டு, ஆனால் ஒற்றுமையாக இருப்பார்கள். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும் அவர்கள் பிரியவே மாட்டார்கள். அதில் மாற்றமே இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?