Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த ஊருக்கு செல்ல எங்கு பேருந்து ஏற வேண்டும்? - சென்னை அப்டேட்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (14:08 IST)
பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்கிறது.   போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை.  
 
தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது.  ஆனால், தங்களின் சம்பள உயர்வான 2.57 சதவீதத்தை அரசு ஏற்கும் வரை போராட்டம் கைவிடப்படமாட்டாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. 
 
வருகிற 13ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குவதால், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் நாளை முதல் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
தற்போதைக்கு, தற்காலிக ஓட்டுனர்களை வைத்து தமிழக அரசு குறைவான பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்துகளுக்காக பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் 4 அல்லது 5 மணி நேரத்திற்கும் மேல் பேருந்துக்காக காத்துக்கிடக்கின்றனர். இதனால், அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்நிலையில், சென்னையிலிருந்து ஏராளமனோர் வெளியூருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் பட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணா நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.  கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், வேலூர் வழியாக ஆரணி, ஆற்காடு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
 
திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், தமிழக பேருந்து ஊழியர்கள் போராட்டத்தை  இன்னும்  கைவிடவில்லை என்பதால், குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படும் எனத்தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்ன சிறப்பு அம்சங்கள்?

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments