டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தவர் பற்றிய கேள்விக்கு பதில் கூறாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் எழுந்த சென்ற விவகாரம், பத்திரிக்கையாளர் சந்திப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பலரது உயிரை பறித்த டெங்கு காய்ச்சல், தற்போது மீண்டும் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
டெங்கு நோயை கட்டுப்படுத்த, சரியான நேரத்தில் தமிழக அரசு தடுக்க முயற்சி செய்யவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவரின் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், டெங்குவால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தையுடன், தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பினர். மேலும், காலம் கடந்த நடவடிக்கையால்தான் நாமக்கல் மாவட்டத்தில் 8 சிறுவர்கள் உயிரிழந்தனர் என அவர்கள் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த விஜயபாஸ்கர், கடந்த 3 மாத காலமாக என்னுடைய நடவடிக்கைகளை பார்த்து வருகிறீர்கள். அப்படி இருக்கும் போது எப்படி காலம் தாழ்ந்த நடவடிக்கை எனக் கூறுகிறீர்கள். அப்படி சொல்வதற்கு வாய்ப்பே இல்லை எனக் கூறிவிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு அவர் எழுந்து சென்றுவிட்டார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.