குற்றாலம் மெயின் அருவியில் தவறி ஒருவர் தடாகத்தில் விழுந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படையினர் உடனடியாக அந்த நபரை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் குவிந்து வரும் நிலையில் குளிக்க சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில சமயம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் முண்டியடித்த கூட்டம் காரணமாக தடாகத்தில் ஒருவர் தவறி விழுந்தார். இதனை அடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக அவரை மீட்டனர். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் சுற்றுலா பயணிகள் முண்டியடிக்காமல் வரிசையில் நின்று குளித்து வரும்படி கோரிக்கை விடப்பட்டுள்ளது. குற்றால சீசன் கடந்த சில நாட்களாக களைகட்டி வருவதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.