ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் என்பவர் இன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலைக்கு அனைத்து நாட்டின் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருமுருகன் காந்தி தனது சமூக வலைதளத்தில் இந்த படுகொலை மேற்காசிய அரசியலில் மிக மோசமான படுகொலை என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஈரானின் தலைநகரில் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த ஹமாஸின் தலைவர் இசுமாயில் ஹனியே இசுரேலிய அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்காசிய அரசியலில் மிகமோசமான அரசியல் படுகொலை ஈரானில் அரங்கேறியுள்ளது.
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக அயராது போராடிய ஹனியேவின் இழப்பு ஈடுசெய்ய இயலாத வகையில் காசா மக்களுக்கு அரசியல் நெருக்கடியையும், போராட்ட அமைப்புகளுக்கு பின்னடைவையும் கொடுத்துள்ளது.
மிகத்துயரமான தினமாக இன்று விடிந்துள்ளது. தன் குழந்தைகள், பேரக்குழந்தைகள், மருமகன், மருமகள் என தோழர் ஹனியேவின் குடும்பத்தினர் 60 பேரை இசுரேல் படுகொலை செய்துள்ளது. பெருநாள் விழா தினத்தில் குடும்பத்தினரை படுகொலை செய்து தனது ஈவு இரக்கமற்றத்தன்மையை இசுரேல் வெளிப்படுத்தியது.
எதனாலும் பின்வாங்காத தோழர் ஹனியே போராட்டத்தை முன்னகர்த்திக் கொண்டிருந்தார். தற்போது அவர் ஈரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பது, ஈரானுக்குமான நெருக்கடியை அதிகரித்துள்ளது. இனப்படுகொலைக்கு எதிராகவும், இனவிடுதலைக்காகவும் போராடிய தோழர் ஹனியேவிற்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.