Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 பேர் உயிரிழந்த துயரம்.. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்! திருமாவளவன்

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (13:15 IST)
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த  துயரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரி்வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில் நூற்றுக் கணக்கானோர் மயக்கமுற்றனர் என்பதும் 5 பேர்  உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கிறது. இப்பெருந்துயரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிடவேண்டுமென்றும்; உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்! 
 
இந்திய விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் 'விமானப்படை நாளைக்' கடைபிடித்து வருகிறது.  தலைநகர் தில்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் இது நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் - மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை  நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால்  இலட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர். இந்நிலையில் தான், ஐந்து பேர். பலியாகும் அவலம் நடந்துள்ளது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது.
 
தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை  எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 
 
வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்! 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments