Publish Date: Fri, 16 Feb 2018 (08:00 IST)
Updated Date: Fri, 16 Feb 2018 (07:32 IST)
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கி தமிழக மக்களை நேரில் சந்திக்க அரசியல் சுற்றுப்பயணமும் செய்யவுள்ளார். கமல்ஹாசனின் அரசியல் எண்ட்ரி பல அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல், ரஜினி ஆகிய இருவரையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் திருமாவளவன் தான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திருமாவளவன் இணைய பக்கத்தில் 'அமைப்பாய் திரள்வோம்' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த கட்டுரைகள் தற்போது புத்தகமாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த புத்தகத்தை , முறைப்படி அரசியல்வாதிகளை அழைத்து வெளியீட்டு விழா நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் 'அமைப்பாய் திரள்வோம் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியுள்ளார். இது வெறும் புத்தக அழைப்பு விழா மட்டும்தானா? அல்லது எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க இப்போதே திருமாவளவன் அச்சாரம் போடுகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்