Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை கொலை செய்ய முயற்சித்தனர்; ஜெயலலிதா பயப்பட தேவையில்லை - கருணாநிதி

என்னை கொலை செய்ய முயற்சித்தனர்; ஜெயலலிதா பயப்பட தேவையில்லை - கருணாநிதி
, ஞாயிறு, 15 மே 2016 (10:40 IST)
2001ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், நள்ளிரவில் என்னை காவல்துறையினர் கைது செய்தனர். என்னை அப்போது கொல்லவும் முயற்சி நடந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, ”நான் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல தொகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்துவிட்டு இன்று தான் சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்தபோது திமுக அதிகமான இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற செய்திகள் கிடைத்தது.
 
திமுக ஆட்சிக்கு வந்தால் நான் சொல்கிறேன் ஜெயலலிதா பயப்படதேவையில்லை. ஏனென்றால் இந்த கருணாநிதி நம்மை பழிவாங்கிவிடுவாரோ என்று நினைக்க தேவையில்லை. பழிவாங்குகிற எண்ணத்தை எனக்கு அண்ணா கற்பிக்கவே இல்லை. பழிவாங்குவது என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது.
 
ஆனால் பழிவாங்குகிற எண்ணத்தை அண்ணா எனக்கு கற்பிக்காத காரணத்தினால் யாரையும் திமுக ஆட்சிக்கு வந்தால் பழிவாங்க மாட்டோம் என்ற உறுதியை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். இதைவிட ஒரு நல்ல செய்தியை யாரும் உங்களுக்கு சொல்ல முடியாது. 
 
2001ஆம் ஆண்டு அரசியல் சூழ்நிலையை நினைவுப்படுத்தினால் நான் பழிவாங்குவேனா, இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். 2001ஆம் ஆண்டு திமுகவை நசுக்க வேண்டுமென்று அப்போது ஆட்சிக்கு வந்திருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், போலீசாரை என்னுடைய வீட்டுக்கு அனுப்பி என்னை கைது செய்ய சொல்லி எப்படி கைது செய்யப்படுகிறேன் என்பதை கவனிப்பதற்காக தொடர்ந்து அதை தெரிந்து கொள்வதற்காக அவரது வீட்டில் விழித்துக்கொண்டே இருந்தார்.
 
இரவு 2 மணிக்கு. நான் 2001ஆம் ஆண்டு வீட்டில் படுத்துக் கொண்டிருந்தேன். இரவு கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டது. நானும், என்னுடைய மனைவி ராஜாத்தி அம்மையாரும், வீட்டில் உள்ள குழந்தைகளும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவர்கள் இப்படி யாரோ கதவை போட்டு அடிக்கிறார்களே என்று கதவை திறந்து பார்த்தால் போலீசார்.
 
நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள் 2001. உள்ளே நுழைந்தார்கள் போலீசார். நான் விழித்துக்கொண்டு என்னவென்று கேட்டேன். ஒன்றும் இல்லை உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்கள்.
 
நான் என்ன தவறு செய்தேன். என்ன குற்றம் செய்தேன். ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு குற்றமும் செய்யவில்லை. ஜெயலலிதா அம்மையாரின் உத்தரவு, அதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். 
 
என்னை பழிவாங்க, என்னை தண்டிக்க, அன்றைக்கு அவர்கள் எடுத்த முயற்சி அது. அந்த முயற்சியின் காரணமாக என்னை அப்படியே குண்டு கட்டாக தூக்கி, படுக்கையில் இருந்த என்னை வெளியே கொண்டு சென்றார்கள்.
 
அப்போது இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட என்னுடைய மருமகன் முரசொலி மாறன் ஓடோடி வந்தார். என்னவென்று விசாரித்தார். அவரை கைது செய்கிறோம். தடுத்தால் உங்களையும் கைது செய்வோம் என்று மிரட்டினார்கள். மாறன் அஞ்சவில்லை. 
 
ஏன் இதனை நான் சொல்கிறேன் என்றால், 2001ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், நள்ளிரவில் என்னை காவல்துறையினர் கைது செய்தனர். என்னை அப்போது கொல்லவும் முயற்சி நடந்தது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நான் முதல்வரானால் நிச்சயம் யாரையும் பழிவாங்க மாட்டேன்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 90 கோடி மதிப்புள்ள விஜய் மல்லையாவின் சொகுசு பங்களா பறிமுதல்