Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி அரசியல் பேச்சு ; விழித்துக்கொள்வானா தமிழன்? : தங்கர்பச்சான் கேள்வி

Advertiesment
ரஜினி அரசியல் பேச்சு ; விழித்துக்கொள்வானா தமிழன்? : தங்கர்பச்சான் கேள்வி
, வெள்ளி, 19 மே 2017 (17:40 IST)
கடந்த சில நாட்களாக, ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டுகிறது.


 

 
சில அரசியல் தலைவர்கள் ரஜினி அரசியலுக்கு வரட்டும் எனவும், சீமான், சுப்பிரமணியசுவாமி போன்றவர்கள் ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் அரசியலுக்கு வரக்கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்ந சூழ்நிலையில், இயக்குனர் தங்கர்பச்சான் தனது முகநூலில் ஒரு பரபரப்பான கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் ரஜினியை நினைத்துதான் இதை பதிவு செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், ரஜினிக்கு அரசியலுக்கு அச்சாரம் போடும் சூழ்நிலையில், தங்கர்பச்சானின் இந்த பதிவு அவரை பற்றியதாகவே கருதப்படுகிறது.
 
தமிழினம் தோற்றுக்கொண்டே இருப்பது எதிரிகளின் சூழ்ச்சியினால் மட்டுமே என்பதை இனியாவது புரிந்து விழித்துக் கொள்ள வேண்டும். ஆற்றலிலும்,அறிவிலும்,திறமையிலும் உலகத்தில் எவருக்கும் சளைத்ததல்ல தமிழினம். ஒரு நாடு என்றால் எவ்வாறு இருக்க வேண்டும்! மக்கள் என்றால் எவ்வாறு வாழ வேண்டும்!
 
ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்த உருவானதுதான் தமிழீழம். அவ்வளவு அறிவும்,திறமையும்,வீரமும் இருந்தும் நம் சகோதரர்கள் ஒற்றுமையை இழந்ததனால் பகைவர்கள் உள் நுழைந்து நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக்குத்தி வீழ்த்தினார்கள்.
 
அதே நிலைதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் கூட புரிந்து கொள்ளாமல் தமிழினம் குறித்து பீற்றிக் கொண்டிருக்கிறோம்.
 
பல்வேறு சாதிகளாக,மதங்களாக,அரசியல் கட்சித் ஆதரவாளர்களாக, நடிகர்களின் தொண்டர்களாக பிரிந்து கிடந்து நமக்குள்ளேயே சண்டையிட்டு அண்டி பிழைக்க வந்தவர்களை தொடர்ந்து தலைவர்களாக்கி அதிகாரத்தைக் கொடுத்தோம். அதனால்தான் தமிழன் பிள்ளைகள் தாய் மொழியில் கூட படிக்காதபடி சட்டங்கள் உருவாயின. நாம் அடிமைகளாக வாழ்வதோடு அல்லாமல் எதிர்காலத் தலை முறைகளையும் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறோம்!!
 
தமிழினத்தை, மொழியை, பண்பாட்டை, பொருளாதாரத்தை, உடல்நலத்தை, குடும்பங்களை அழித்தொழித்து சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் நமக்குள் சண்டையை மூட்டி விட்டு இனியும் அதிகாரத்தை கைப்பற்ற காத்திருக்கிறார்கள். இதை விட்டு விட்டு எதை எதையெதையோ பேசி விவாதித்து நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.
 
இனியாவது வீழ்த்தப்பட்ட தமிழினம் விழித்துக்கொள்ள வேண்டும். பகைவர்களை விரட்டி அதிகாரத்தை கைப்பற்றி அனைத்திலும் தலைமை ஏற்க வேண்டும். முதலில் தமிழினத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சாதி,மதம்,காலம் காலமாக ஆதரித்த கட்சி என எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி நின்று தமிழனாக ஒன்று சேருங்கள்.
 
இனியும் குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் பகைவர்களுக்குத்தான் கொண்டாட்டம். நம்மில் குறைகள் யாரிடம்தான் இல்லை. குறைந்த தீமைகளை உடைய,அதிக திறமைகள் கொண்ட,ஏற்கெனவே செயலாற்றி சாதித்துக் காண்பித்தவர்களை சாதி மதம் கட்சி என சுட்டிக்காட்டி இனியும் விலக்கி வைக்காதீர்கள். இதனால் அழிவது நாம் மட்டும் அல்ல. நம்மின் எதிர்காலத் தலைமுறைகளும்தான் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். நம்மிடம் குறைகளை வைத்துக்கொண்டு நம்மால் எதிலும் முன்னேறவே முடியாது.
 
இப்போது தமிழினத்திற்கு தேவை ஒற்றுமை ஒன்றுதான். அது இருந்தால் நாம் எதற்காக யார் யாரிடமோ கையேந்தி காத்துக்கிடக்க வேண்டும்? நாளுக்கொரு போராட்டத்திலேயே வாழ்வைக் கழிக்க வேண்டும். விழித்துக் கொள்வானா தமிழன்? விழித்துக் கொள்ளுமா தமிழினம்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த் நேர்மையற்றவர்: துணிச்சலுடன் விளாசும் சீமான்!