டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது குறித்து, பொதுநல வழக்குகள் மைய நிர்வாகி ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் 11 நிறுவனங்கள் மதுபானம் உற்பத்தி செய்கின்றன. இந்த ஆலைகள் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் கொண்டவர்களால் நடத்தப்படுகிறது.
மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகிக்கப்படும் மதுபானங்களில் அதிக அளவு நச்சுத்தன்மை உள்ளது. இதனால், தரமற்ற மதுபானங்களை குடிமகன்கள் அருந்துவதால் உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கிறது.
எனவே, தமிழகத்தில் வினியோகம் செய்யப்படும், மதுபானங்களில் உள்ள நச்சுத்தன்மை குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுதாகர் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், மனுதாரர் உரிய ஆதாரம் தாக்கல் செய்யவில்லை என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி தள்ளுபடி செய்தனர்.