சென்னையின் முக்கிய பகுதிகளில் திடீரென மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வளிமண்டல சுழற்சி, காற்று வேகம் மாறுபாடு காரணமாக இன்று தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக தூத்துக்குடி உட்பட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் இன்று, வட மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலை நிலவும் என கணிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத விதமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் சற்று முன் மழை தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், தியாகராய நகர், பாண்டி பஜார், மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் போல் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை சென்னையின் பல இடங்களில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.