Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (10:42 IST)
உழைப்புச் சுரண்டலைக் கைவிட்டு, ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். 

 
இது குறித்து சீமான் தனது அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
 
தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்காவல் படையினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது முதல் பாதுகாப்புப் பணி வரை அனைத்துவகைக் காவல் பணிகளிலும் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். 
 
புயல், வெள்ளம் போன்ற நெருக்கடி சூழ்ந்த இயற்கைப் பேரிடர் காலங்களிலும், தேர்தல் மற்றும் பெருந்திருவிழாக் காலங்களிலும் இரவு பகல் பாராத அவர்களின் அர்ப்பணிப்புமிக்கப் பணியென்பது மிகுந்த போற்றுதற்குரியது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலும், தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதிலும் ஊர்காவல் படையினரின் ஓய்வறியாத உழைப்பு என்பது ஈடு இணையற்றதாகும். 
 
ஆனால் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றுவரை வழங்கப்படவில்லை பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் வாடும் ஊர்காவல் படையினர், குடும்ப வறுமை தாளமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், நாளொன்றுக்கு 150 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, 560 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டது.
 
ஆனால், அதுவரை 25 நாட்களாக இருந்த பணிநாட்களை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து முந்தைய அதிமுக அரசு வஞ்சித்தது. பின்னர், பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்தபோதும் அது போதுமானதாக இல்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் அதே நிலையே நீடிப்பதால், ஊதியம் உயர்த்திய பிறகும், அதன் முழுப்பயனை பெறமுடியாமல் ஊர்காவல் படையினர் இன்றுவரை தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதுதான் கொடுமையின் உச்சமாகும். அதுமட்டுமின்றி, 10 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் மாதம் முழுவதும் வேலை செய்ய வேண்டிய கட்டாயச் சூழலே நிலவுகிறது.
 
கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊர்காவல் படையினருக்கு 18000 ரூபாய் அளவுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உரிய ஊதியம் வழங்கப்படாததோடு, அவர்களுக்கென எவ்வித ஊக்கத்தொகையோ, ஓய்வூதியமோ இல்லாமல் பணிபுரிய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊர்காவல் படையினருக்கான பணியை வரன்முறைப்படுத்த உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு இன்றுவரை அதைச்செய்யத் தவறியதே தற்போது ஊர்காவல் படையினர் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் முக்கியக் காரணமாகும்.
 
ஆகவே, ஊர்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டுமெனவும், அவர்களது பணி நாட்களை 25 நாட்களாக உயர்த்தி உரிய ஊதியம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், காவலர்களுக்கு வழங்கப்படுவதுபோல் பயணப்படி, ஊக்கத்தொகை, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஊர்காவல் படையினருக்கும் கிடைக்க நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments