சசிகலா தரப்பினருக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பா விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.வின் நம்பிக்கைக்குரியாவராக இருந்த சசிகலாவிற்கு அதிமுகவில் மாநில மகளிர் அணிச் செயலாள தூத்துக்குடி மேயர் மற்றும் ராஜ்யசபா எம்.பி ஆகிய பதவிகள் அவருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. சிவாவின் கன்னத்தில் அறைந்து சர்ச்சையையில் சிக்கியதால் கார்டன் தரப்பினரால் கடுமையாக கண்டிக்கப்பட்டார்.
அதன் பின், பாராளுமன்ற கூட்டத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தன்னை தாக்கியதாக பகீரங்கமாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தப்பட்டார். ஆனால், அதை சசிகலா புஷ்பா ஏற்கவில்லை.
ஜெ.வின் மறைவிற்கு பின், சசிகலா தரப்பினரை நேரிடையாக எதிர்க்க தொடங்கினார். அதிமுக சட்ட விதிகளின் படி, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல், ஜெ.வின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் புகார் மனு கொடுத்தார்.
அதன்பின், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், ஜெ.வின் மர்ம மரணம் குறித்த சந்தேகத்தை அவர்கள் கையில் எடுத்தார்கள். எனவே, சமீப காலமாக சசிகலா புஷ்பா அமைதி காட்டி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் நெல்லையில் நடந்த ஒரு நிகழ்சியில் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து எதுவும் பேசாமால், அவர் சார்ந்துள்ள நாடார் சமுதாய இளைஞர்கள் பற்றி பட்டும் பெருமையாக பேசினார். அந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விரைவில் அவர் நாடார் சமூக பேரவை ஒன்றை தொடங்கி, பின்னாளில் அதை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சி தொடங்குவதுதான் சரியான தருணம் என அவர் நினைப்பதாக தெரிகிறது. எனவே விரைவில் அது பற்றிய அறிவிப்பும், பேரவை கொடியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.