Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் அரசால் தனியார் பள்ளிகளுக்கு புத்தகங்களை இலவச வழங்க முடியாதா? சரத்குமார்

sarathkumar

Mahendran

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (14:30 IST)
தமிழ்நாடு அரசு பாடநூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என சமீபத்தில் தனது கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முழுவதும், தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தின் விலையை தமிழக அரசு 40% உயர்த்தி இருப்பது ஏற்புடையதல்ல.

காகிதம், அச்சு உள்ளிட்ட புத்தகத்தின் உற்பத்திக்கு ஆகும் செலவை காரணம் காட்டி, விலையை உயர்த்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கக்கூடிய அரசால், மகளிருக்கு கட்டணமின்றி பேருந்து பயணச் சலுகை வழங்கக்கூடிய அரசால், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கக்கூடிய அரசால் ஏன் இன்னும் எத்தனையோ திட்டங்களில் மானியம் வழங்கக்கூடிய தமிழக அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்க முன்வரவில்லை என்றாலும் விலையை உயர்த்தாமல், அதற்கான தொகையை மானியமாக வழங்கி இருக்கலாம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியாவில், கல்வியை பொறுத்தவரை தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு, கல்வியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் செய்த மறுமலர்ச்சியும், எழுச்சியும்தான் காரணம். இந்த புத்தக விலையேற்றம் மாணவர்களின் இடைநிற்றலுக்கு கூட காரணமாக அமையலாம். ஏனெனில், தனியார் பள்ளிகள் இந்த புத்தக விலை சுமையை மாணவர்களின் பெற்றோர் மீது தான் திணிக்கும் என்பது நிதர்சனம்.

தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களை அச்சடிப்பதில், லாபம் ஈட்ட அல்லது நஷ்டத்தை ஈடுகட்ட பல்வேறு வழிகள் இருக்கும் போது, புத்தக விலையை உயர்த்தி கல்வி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி விடக்கூடாது. எனவே, தமிழக அரசு புத்தக விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்.! 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்க.! மருத்துவ நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு.!!