Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெருங்குகிறது நீட் தேர்வு: என்ன செய்துள்ளது தமிழக அரசு: அன்புமணி கேள்வி

Advertiesment
நெருங்குகிறது நீட் தேர்வு: என்ன செய்துள்ளது தமிழக அரசு: அன்புமணி கேள்வி
, புதன், 24 ஜனவரி 2018 (06:11 IST)
கடந்த ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க சீட் கிடைக்காத அனிதா தனது இன்னுயிரை நீர்த்தார். இதனால் மாணவர்கள் மத்தியில் நீட் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்ச்சி ஏற்பட்ட போதிலும் மத்திய, மாநில அரசு இதில் அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நெருங்கிவிடும். இருப்பினும் இன்னும் நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு ஆரம்பிக்கவில்லை என்பதால் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதில் தங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதை தமிழகத்தை ஆளும் பினாமி அரசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த ஆட்சியாளர்கள் நீட் தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் அதற்காக எதுவும் செய்யாதது கண்டிக்கத்தக்கது.

2018-19ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் மே மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்து, அதை அரைகுறையாகத் தொடங்கியிருப்பதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வை எழுதித் தான் தீர வேண்டும் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கால்களில் மண்டியிட்டுக் கிடக்கும் பினாமி ஆட்சியாளர்களால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி ஓராண்டுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாதது வெட்கக் கேடானது ஆகும்.

இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறத் தவறிவிட்ட ஆட்சியாளர்கள், நீட் தேர்வுக்கான பயிற்சியையாவது மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வழங்குகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடப்புக் கல்வியாண்டின் தொடக்கத்தில் அறிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள 412 ஒன்றியங்களிலும் தலா ஒரு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அறிவித்தவாறு எதையும் செய்யாத தமிழக அரசு, நவம்பர் 13-ஆம் தேதி தான் இத்திட்டத்தை தொடங்கியது. அதுவும் அனைத்து ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்களைத் திறக்காத அரசு, முதலில் 100 ஒன்றியங்களில் மட்டும் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கியது. மீதமுள்ள ஒன்றியங்களில் ஜனவரி மாதத்திற்குள் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால், ஜனவரி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், முதலில் தொடங்கப்பட்ட 100 மையங்களைத் தவிர ஒரு மையம் கூட புதிதாக திறக்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு உத்தேசமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் மார்ச் மாதம் முழுவதும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதுவதற்குப் போய்விடும். அவ்வாறு இருக்கும் போது நீட் தேர்வுக்கான பயிற்சியை முன்கூட்டியே தொடங்கியிருந்தால் தான் மாணவர்கள் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியும்.

ஆனால், 312 ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் இன்னும் திறக்கப்படாததால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வாறு இருக்கும் என்ற புரிதல் கூட இன்னும் ஏற்படவில்லை. நீட் தேர்வுக்காக தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியும் பயனுள்ளதாக இல்லை. கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாகப் பாடம் நடத்துவது ஆகும். ஆனால், அரசின் இலவச நீட் தேர்வுப் பயிற்சி அப்படிப்பட்டதல்ல. இது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்தப்படும் பயிற்சி ஆகும். வகுப்பறை போன்ற கட்டமைப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால்தான் மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான், மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபெற முடியும். வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் இது சாத்தியமில்லை. இந்த முறையில், மாணவர்கள் ஆசிரியருடன் உரையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட 412 மையங்களின் மாணவ, மாணவியரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக பயிற்சி அளிப்பதற்கு பதிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிப்பது என மாணவர்களுக்கு அடுத்தடுத்து பினாமி தமிழக அரசு துரோகம் செய்து வருகிறது.

வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மாதங்கள் கூட பயிற்சி கிடைக்காத நிலையில், அவர்களால் நீட் தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெற முடியும்? தமிழகத்தில் மீதமுள்ள 312 ஒன்றியங்களில் உடனடியாக நீட் பயிற்சி தொடங்கப்பட்டால் கூட, மாணவர்களால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குத் தான் தயாராக முடியுமே தவிர, நீட் தேர்வுக்கான பயிற்சியில் கவனம் செலுத்த முடியாது. இவ்வாறாக தமிழக அரசு அதன் பொறுப்பற்ற செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை சிதைத்து சின்னாப்பின்னமாக்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஏராளமான அனிதாக்கள் உருவாவதற்கே தமிழக அரசின் நடவடிக்கைகள் வழி வகுக்கும். இந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக ஆசிரியர்கள் நேரடியாக பயிற்சியளிக்கும் மையங்களை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அது தான் அதன் துரோகங்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். அரசு இனியாவது உடனடியாக விழித்துக்கொண்டு மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியது அதன் கடமை ஆகும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்ரோ அனுப்பிய அபூர்வ புகைப்படங்கள்