ஹாலிவுட் திரைப்படங்களில் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் உள்ளிட்ட பல பேண்டஸி கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்து வந்த ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.
ஹாலிவுட்டின் 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத பல கார்ட்டூன் அனிமேஷன் படங்களில் ஒன்று தி லயன் கிங். அதில் வரும் அரசன் சிங்கமான முஃபாசாவுக்கு கம்பீரமான குரலை வழங்கியவர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். மேலும் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் பிரபலமான வில்லனான டார்த் வேடர் கதாப்பாத்திரத்திற்கும் ஜோன்ஸ் குரல் கொடுத்திருந்தார்.
பல நூறு ஹாலிவுட் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களுக்கு பிண்ணனி குரலாக ஒலித்த ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் ஹாலிவுட்டின் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். ஹாலிவுட்டின் சிறந்த நடிகர்கள் கூட EGOT எனப்படும் எம்மி, கிராமி, ஆஸ்கர் மற்றும் டோனி ஆகிய நான்கு விருதுகளையும் பெறுவது மிகக் கடினம். ஆனால் ஹாலிவுட்டில் இந்த நான்கு விருதுகளையும் வென்ற பின்னணி குரல் கலைஞர் ஜேம்ஸ் எர்ல் ஜோன்ஸ்.
கடந்த 2014ம் ஆண்டு வரை ஆக்டிவாக பல படங்களுக்கு குரல் கொடுத்து வந்த ஜோன்ஸ் வயது மூப்பு காரணமாக பிண்ணனி குரல் துறையிலிருந்து விலகினார். தற்போது 93 வயதான ஜோன்ஸ் நியூயார்க்கில் உள்ள தனது வீட்டில் உடல்நிலை குறைவால் காலமானார். தங்களது பால்யங்களை தனது கம்பீர குரலால் இனிமையாக்கிய ஜோன்ஸுக்கு ஹாலிவுட் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Edit by Prasanth.K