தமிழக அரசு பொங்கல் பையில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என குறிப்பிடப்பட்டது குறித்து எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் முன்னதாக கருணாநிதி ஆட்சியின்போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என அதற்கு எதிர்ப்புகளும் இருந்தன.
தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைத்த நிலையில் தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரியில் பொங்கல் கொண்டாடுவதற்கான பொங்கல் தொகுப்பு பையில் பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “தமிழகத்தில் பல ஆண்டுகளாக மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்வரும் காலங்களிலும் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.