ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றால் நீதிவிசாரணை நடத்த வேண்டும். அதில் பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
ஓபிஎஸ் அணியினருக்கு என்ன டிமாண்ட் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தேவை ஜெயலலிதா ஆட்சி, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தினகரன் கட்சியும், ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்பி விலகி விட்டார்.
சத்தியமாக ஜெயலலிதா மீது ஆணையிட்டு சொல்கிறேன். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். 60 நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் விசாரிக்கப்பட வேண்டும். எம்ய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர், சிங்கபூர் டாக்டர் என மருத்துவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.
மோடியையும் விசாரணைக்கு கூப்பிடுங்கள். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். மர்மம் மர்மம் என்று எத்தனை நாட்களுக்கு சொல்வீர்கள். இது நியாயம் இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.