Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்மை நாடி வந்த மக்களுக்கு பசியாற உணவளித்த மனிதநேயவாதி.. விஜயகாந்த் குறித்து சீமான்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (13:56 IST)
தம்மை நாடி வந்த மக்களுக்கு பசியாற உணவளித்த மனிதநேயவாதி என விஜயகாந்த் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
 
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் கனிவுமிக்கப் பெருங்குணத்தாலும், நிர்வாகத் திறமையாலும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்ட பெருமைக்குரியவர். தம் நண்பர்கள் பலரின் திரைத்துறை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை. தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும்.
 
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள  தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
 
அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments