ஊரடங்கு உத்தரவால் ஆடுகள் வரத்து குறைந்துள்ளதால் ஆட்டுக்கறி விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு போக்குவரத்துகள் முடங்கியுள்ளன. மக்கள் பலர் வீடுகளில் இருந்து வரும் நிலையில் பெரும்பாலும் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளவே விரும்புகின்றனர்.
பெரும்பாலும் கோழி விலை குறைவாக இருப்பதால் அதையே பெரிதும் வாங்கி வந்த மக்கள் தற்போது சில போலி செய்திகள் பரவலால் கோழிக்கறியையே பெரிதும் தவிர்த்து வருகின்றனர். அதனால் கோழிக்கறி வாங்க ஆள் இல்லாமல் விலை பெரிதும் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் மக்களின் அடுத்த தேர்வாக இருப்பது ஆட்டுக்கறி.
ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடு விற்பனை சந்தைகள் இயங்க தடை உள்ளதால் ஆடுகள் விற்பனையே குறைந்துள்ளது. இதனால் ஆட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் ஆட்டுக்கறிக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையால் ஆட்டிறைச்சி கிலோ ரூ.1000 வரை விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் மக்கள் பலர் ஆட்டிறைச்சி வாங்க கடைகளில் கூடுவதால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சில காலம் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.